பூட்டியிருந்த வீட்டில் நகைகள் மாயம் தோழி வீட்டில் திருடிய பெண் கைது; 21 பவுன் நகை மீட்பு


பூட்டியிருந்த வீட்டில் நகைகள் மாயம் தோழி வீட்டில் திருடிய பெண் கைது; 21 பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 12 May 2019 10:30 PM GMT (Updated: 12 May 2019 9:53 PM GMT)

பூட்டியிருந்த வீட்டில் நகைகள் மாயமான வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி தோழியின் வீட்டிலேயே திருடிய பெண்ணை கைது செய்தனர்.

காரைக்குடி,

காரைக்குடி செஞ்சை ஏ.வி.பி.எல். தெருவில் வசிப்பவர் கவுசல்யா. இவரது வீட்டின் சாவி தொலைந்து விட்டதால், மாற்று சாவியை பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில் மகனை பள்ளியில் சேர்ப்பதற்காக காலையில் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். மதியம் திரும்பி வந்த போது, ராஜஸ்தானில் வேலை பார்த்து வரும் கணவர் ஸ்டாலின் பணம் தேவைப்படுவதால், வீட்டில் இருக்கும் நகைகளை அடகு வைத்து பணம் அனுப்புமாறு போனில் கூறினாராம்.

அதைத்தொடர்ந்து வீட்டை திறந்து, உள்ளே பீரோவில் இருந்த நகைகளை பார்த்த போது, நகைகளை மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் காரைக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில் கவுசல்யாவின் வீட்டு எதிர் வீட்டு மாடியில் இருந்த ஜோதி (வயது 44) என்ற பெண்ணை கைது செய்து, அவர் மறைத்து வைத்திருந்த 21 பவுன் நகைகளை மீட்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், கவுசல்யாவும், ஜோதியும் நெருங்கிய தோழிகள். எங்கு சென்றாலும் இவர்கள் ஒன்றாக செல்வார்களாம்.

வீட்டில் ஒன்றாக அமர்ந்து டிவி பார்ப்பார்கள். இந்தநிலையில் காணாமல் போன கவுசல்யாவின் வீட்டு சாவியை ஒரு மாதத்திற்கு முன்பு ஜோதி எடுத்து வைத்துக் கொண்டார். அதை சம்பவத்தன்று பயன்படுத்தி வீட்டை திறந்து, உள்ளே பீரோவின் அருகிலேயே இருந்த அந்த சாவியையும் எடுத்து நகைகளை எடுத்து சென்றார்.

முன்னதாக ஜோதி, கவுசல்யாவுக்கு போன் செய்து அவர் எங்கு இருக்கிறார் என்று உறுதிபடுத்தி கொண்ட பின்பு தனது கைவரிசை காட்டியுள்ளார். கவுசல்யாவின் செல்போன் மூலம் விசாரித்ததில் ஜோதி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது என்றனர். அதைத்தொடர்ந்து போலீசார் ஜோதியை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story