திருமங்கலத்தில் எதிர் எதிரே ரெயில்கள் வந்த சம்பவம்: மதுரை கோட்ட இயக்க மேலாளர் இடமாற்றம்


திருமங்கலத்தில் எதிர் எதிரே ரெயில்கள் வந்த சம்பவம்: மதுரை கோட்ட இயக்க மேலாளர் இடமாற்றம்
x
தினத்தந்தி 12 May 2019 11:00 PM GMT (Updated: 12 May 2019 10:35 PM GMT)

மதுரை அருகே ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே ரெயில்கள் வந்த சம்பவம் தொடர்பாக மதுரை கோட்ட இயக்க மேலாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

மதுரை,

திருமங்கலம் ரெயில் நிலையத்தில் கடந்த 9-ந்தேதி சிக்னல் பழுதானது. இதனால், மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் பாசஞ்சர் ரெயில் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. மறு மார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி வந்த பாசஞ்சர் ரெயில் கள்ளிக்குடி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. நீண்ட நேரமாகியும் சிக்னல் பழுது நீக்கப்படாததால், இந்த ரெயில்களில் வந்த பயணிகள் அந்தந்த ஸ்டேஷன் மாஸ்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் நிலைமை மோசமானது. அதனைத்தொடர்ந்து இந்த ரெயில்களை சிக்னல் இல்லாமல் இயக்குவதற்கு மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இதில் எந்த ரெயிலை முதலில் இயக்குவது என்பதில் வடமாநிலத்தை சேர்ந்த கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் சிவசிங் மீனாவுக்கும், தமிழகத்தை சேர்ந்த திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமாருக்கும் இடையே மொழி பிரச்சினை காரணமாக தகவல் தொடர்பில் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, கள்ளிக்குடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செங்கோட்டை- மதுரை பாசஞ்சர் ரெயில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதேபோல், திருமங்கலம் ரெயில் நிலையத்தில் இருந்தும் அந்த ரெயில் புறப்பட தயாரானது. இதனைத் தொடர்ந்து திருமங்கலம் ரெயில் நிலைய கேட் கீப்பருக்கு கள்ளிக்குடியில் இருந்து ரெயில் புறப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உஷாரான கேட் கீப்பர், இந்த தகவலை திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு தெரியப்படுத்தி ரெயிலையும் கேட் அருகே நிறுத்தி விட்டார். திருமங்கலத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவரக்கோடடை கேட் கீப்பருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கள்ளிக்குடியில் இருந்து வந்த அந்த ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த ரெயில்களால் ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மதுரை இயக்க பிரிவு கட்டுப்பாட்டாளர் முருகானந்தம், திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார், கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் சிவசிங் மீனா ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இதுகுறித்து உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

முதல்கட்ட விசாரணை முடிந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டர், கட்டுப்பாட்டாளர் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தென்னக ரெயில்வே தலைமை அலுவலகத்தில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த சம்பவத்தின் எதிரொலியாக மதுரை கோட்ட இயக்க மேலாளராக இருந்த பிரேம்குமார் திருச்சி கோட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மதுரை ரெயில்வே வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மதுரை கோட்ட இயக்க மேலாளராக பணியாற்றி வந்த பிரேம்குமார் திருச்சிக்கு இட மாறுதல் கேட்டு ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தாராம்.

எனவே இந்த இடமாற்றம் என்பது ஒரு கண்துடைப்பாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

Next Story