திரைத்துறையில் சாதிக்க விரும்புகிறீர்களா?
சினிமா ஆர்வத்தில், திரைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் நோக்கத்துடன் சென்னையில் முகாமிட்டிருப்பவர்கள் ஏராளம்.
இளைஞர்கள் மட்டுமல்லாமல் வயது வித்தியாசம் இல்லாமல், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, தங்களுக்கான கதாபாத்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
திரைத்துறையில் சாதிக்க விரும்புபவர்கள், சொந்தத் திறமை மட்டுமல்லாது திரைத்துறை சார்ந்த அனுபவங்களையும் பெற்றிருப்பது அவர்களின் கனவை நனவாக்கும். நடிப்பு பயிற்சி மற்றும் திரைத்துறை தொழில்நுட்ப பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் பல சென்னையில் இருந்தாலும் குறைந்த செலவில் திரைத்துறை அனுபவங்களை கற்றுத்தருவது அரசு திரைப்பட கல்லூரியான எம்.ஜி.ஆர். திரை மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்தான். தரமணியில் செயல்படும் இந்த பயிற்சி கல்லூரியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, டிஜிட்டல் இண்டர்மீடியட், இயக்கம், திரைக்கதை அமைப்பு, எடிட்டிங், அனிமேஷன், விஷுவல் எபகெட் போன்ற பாடத்திட்டங்கள் இங்கு நடத்தப்படுகிறது. இவை 4 ஆண்டுகள் கொண்ட படிப்புகளாகும். கலைத்துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் இதில் தங்களுக்கு விருப்பமான பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 3 திரைப்படக் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. தனியார் பயிற்சி மையங்களைவிட கட்டணமும் குறைவு. சுமார் ரூ.21 ஆயிரத்தில் ஓராண்டு கல்வியை படித்து முடிக்கலாம். இறுதியாண்டு பாடத்திட்ட பயிற்சிக்காக சினிமா தயாரிப்பதற்கான தொழில்நுட்ப வசதிகளுக்காக அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்குகிறது.
ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 14 பேர் சேர்க்கப்படுகிறார்கள். ஏதேனும் ஒரு பிரிவில் பள்ளிப்படிப்பில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு சலுகைகளும் வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள், இதற்கான விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, நிரப்பி அனுப்பலாம். தேவையான சான்றுகள் இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் Principal, M.G.R. Government Film and Television Institute, Tharamani, Chennai- 600113, என்ற முகவரிக்கு வருகிற 28-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.
இது பற்றிய விவரங்களை http://www.tn.gov.in/miscellaneous/mgrinstitute.html என்ற இணைய பக்கத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story