இனி, நமது உடலே ‘மெமரி கார்டு’தான்!
நகத்தில் ஒரு நூலகத்தையே சேமிக்கலாம்; ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாது
விரைவில் நமது உடலையே மெமரி கார்டாக தகவல்களை சேமிக்க பயன்படுத்தப்போகிறோம். அதற்கான வழிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துவிட்டனர்.
கணினிகளில் தகவல்கள்-படங்கள் மின்னணு தகவல்களாக (டேட்டா) சேமிக்கப்படுகின்றன. இந்த டேட்டாக்களை நமது உடல் செல்களிலும் பதிந்து வைக்க முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
மூளையானது நரம்பு செல்களான நியூரான்களில் நமது நினைவுகளை பதிந்து வைத்திருக்கிறது. மரபணுக்களிலும் உயிரின் இயக்கம் பொதிந்து கிடக்கிறது. எனவே உடல்செல்கள் டேட்டா பதியும் திறன் பெற்றவைதான் என்பது விஞ்ஞானிகளின் நீண்டகால நம்பிக்கை. தற்போது செயற்கையாக உடல் செல்களில் தகவல்களை சேமிக்கும் வழிகளை வெற்றிகரமாக சாத்தியமாக்கி இருக்கிறது ஹார்வர்டு ஆய்வுக்குழு.
கணினி- செல்போன் போன்ற மின்னணு கருவிகளின் பெருக்கத்தால் டேட்டா சேமிப்பு மிக முக்கியமானதாக மாறிக்கொண்டிருக்கிறது. குறுகிய இடத்தில் அதிகமான டேட்டாக்களை சேமித்து பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உலகில் எங்கு சென்றாலும் பயன்படுத்தத்தக்க ‘கிளவுட்’ சேவை போன்ற சேமிப்பு நுட்பங்களுக்கு வரவேற்பு உள்ளது. அதுபோல தனிமனித உடலிலும் அதிகமான தகவல்களை சேமித்து வைத்துக் கொண்டால் எங்கும், எப்போதும் பயன்படுத்த முடியும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்புதான் இந்த கண்டுபிடிப்பு.
நமது மரபணுக்களில் உயிரினத்தின் மொத்த தகவல்களும் பதிவாகி இருக்கிறது, அதன்படியே வளர்ச்சிகள், பரம்பரை பண்புகள், இயக்கங்கள் நடைபெறுகிறது இல்லையா? இந்த நுண்ணிய மரபணுக்கள் அதிகமான கணினி டேட்டாக்களையும் சேமிக்கும் திறன் கொண்டது. இதில் செயற்கையாக தகவல்களை பதியும் நுட்பத்தையே விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
‘ஆலிகோபெப்டைடு’ எனப்படும் உயிர்மூலக்கூறுகளில் வேதிப்பிணைப்பு மூலம் குறிகளை பதிக்கும் முறையை அவர்கள் உருவாக்கி உள்ளனர். இதில் பிணைப்பு ஏற்படுவது கணினிகளின் பைனரி குறியீடான 1 என்றும், பிணைப்பு ஏற்படாதது 0 குறியீடாகவும் பதிவு செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் தகவல்கள் மற்றும் படங்களை உயிர் மூலக்கூறுகளில் பதியலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
“ஆரம்பகட்ட நிலையில் உள்ள இந்த ஆராய்ச்சியில், தற்போதைய நிலையில் ஒரு விநாடிக்கு 8 பிட் அளவுடைய தகவல்களை பதிவு செய்ய முடியும், 20 பிட் அளவுள்ள தகவல்களை பதிவிறக்கம் செய்து படிக்க முடியும். ஆனால் உயிர் மூலக்கூறுகளில் எண்ணற்ற அளவிலான டேட்டாக்களை பதிய முடியும் என்பது ஆச்சரியமான உண்மை. உதாரணமாக ஒரு மேஜை கரண்டி அளவுடைய புரதமூலக்கூறுகளில், நியூயார்க் நூலகத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் சேமிக்க முடியும்” என்கிறார்கள் விஞ்ஞானிகள். மேலும் உயிர் மூலக்கூறுகளில் பதியும் டேட்டாக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு அழியாமல் இருக்கும் என்பது மேலும் ஆச்சரியம் தருவதாகும்.
பாதுகாப்பான டேட்டா சேமிப்பு மற்றும் அதீத டேட்டா தேவைகளுக்கு ஏற்ற எதிர்கால தொழில்நுட்பமாக வளர்ச்சி காணப்போகிறது “டி.என்.ஏ. டேட்டா” எனப்படும் உயிர்மூலக்கூறு டேட்டா சேமிப்பு நுட்பம்.
Related Tags :
Next Story