மூளையைக் கண்காணிக்கும் நவீன காதணி கருவிகள்


மூளையைக் கண்காணிக்கும் நவீன காதணி கருவிகள்
x
தினத்தந்தி 13 May 2019 1:13 PM IST (Updated: 13 May 2019 1:13 PM IST)
t-max-icont-min-icon

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’’ என்பது தமிழ்ப்பழமொழி. அதுபோலவே, “கண்கள்தான் உள்ளத்தின் ஜன்னல்” (Eyes are windows to the Soul) என்று ஒரு ஆங்கில பழமொழி இருக்கிறது.

மனிதர்களின் உள்ளத்து உணர்வுகளை, எண்ணங்களை படம்பிடித்துக் காட்டும் திறன் நம் முகத்துக்கும், கண்களுக்கும் உண்டு என்பதே இவ்விரு பழமொழிகள் சொல்லும் கருத்து. ஆனாலும், என்னதான் முகமும், கண்களும் உள்ளத்து உணர்வுகளை பிரதிபலித்தாலும் அதை சுலபமாக எல்லாராலும் புரிந்துகொள்ளவோ, டீகோட் (decode) செய்யவோ முடியாது என்பதுதான் எதார்த்தம்.

மேலும், ‘நீ என்ன நினைக்கிறாய் என்று நான் சொல்லட்டுமா?’ என்று கேட்கும் நம் நண்பர்களோ, நெருக்கமானவர்களோ பெரும்பாலும் நம் உணர்வு களை துல்லியமாக வெளிப்படுத்துவது இல்லை.

அதனால் நம் மூளையை கண்காணிக்கும் அல்லது எண்ணங்களைப் படிக்கும் கருவிகளை உருவாக்க விஞ்ஞானிகள் தற்போது மிகவும் தீவிரமாக முயன்று வருகின்றனர். அத்தகைய ஆய்வு முயற்சிகளின் பலனாக ‘மூளை-கம்பியூட்டர் இடைமுக கருவிகள்’ (Brain Computer Interface, BCI) எனும் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்தநிலையில், நம் காதுகளின் வழியாக கடந்துசெல்லும் நரம்பியல் சமிக்ைஞகளை கவர்ந்து அவற்றுடன் தகவல் தொடர்பு செய்வதன் மூலம் நம் மூளையை கண்காணித்து, அதனுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் அசாத்திய திறன்கொண்ட ‘ஹியரபுல்ஸ்’ (Hearables) எனும் ஒரு கருவி, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானி மற்றும் டால்பி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாக பணிபுரியும் பாப்பி க்ரம் (Poppy Crum) சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த ஹியரபுல் கருவியானது நம் காதுகளை வந்தடையும் பல்வேறு உரையாடல்களில் நமக்கு தேவையானதை மட்டும் குறிப்பிட்டு கேட்கவும், நம் மூளையை கண்காணித்து, காதில் எப்போதும் மணி அடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் ‘டின்னிடிஸ்’ (tinnitus) போன்ற குறைபாடுகளை குணப்படுத்த உதவலாம் என்கிறார் விஞ்ஞானி பாப்பி.

முக்கியமாக, ஹியரபுல் போன்ற ஹைடெக் கருவிகளின் வருகை மூலமாக இயற்கை அல்லது உயிரியல் நுண்ணறிவுக்கும் (Biological intelligence) செயற்கை நுண்ணறிவுக்குமான வேறுபாடு வேகமாக மறைந்துகொண்டே வருகிறது என்று கூறப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆனால் மக்களை பெரிதும் கவராமல் போன கூகுள் மூக்குக் கண்ணாடி (Google glass) போல ஸ்டைலாக இல்லாமலும், பார்ப்பதற்கு விநோதமாகவும் இல்லாமல், இந்த ஹியரபுல் கருவியானது குறிப்பிட்ட உரையாடலை மட்டும் தனியாக பிரித்து நம் காதுக்கு கொண்டுவரும் என்றும், மேலும், நம் நரம்பியல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் ஒரு ஹெட்செட் போன்ற சாதாரண கருவியாகவும், பிறரின் கவனத்தை பெரிதும் ஈர்க்காமல், நம்மை சங்கடத்தில் ஆழ்த்தாத ஒரு கருவியாகவும் இருக்கும் என்கிறார் விஞ்ஞானி பாப்பி க்ரம்.

அதுமட்டுமல்லாமல், மூளையுடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு கருவியானது, காது வழியாக செயல்படும் ஒரு கருவியாக இருப்பதே சிறந்த ஒரு தேர்வாக இருக்கும் என்றும் கூறுகிறார் க்ரம். ஏனெனில் நம்முடைய காது என்பது கம்ப்யூட்டரில் இருக்கும் யு.எஸ்.பி போர்ட் போன்றது என்கிறார்.

எப்படி என்று கேட்டால், ஒரு யு.எஸ்.பி.யைக் கொண்டு கம்பியூட்டருக்குள் ஒரு தகவலை பதிவேற்றவும் முடியும், அதேசமயம் தகவல்களை காப்பி செய்து கொள்ள அல்லது பதிவிறக்கம் செய்யவும் முடியும். அதுபோல, இந்த ஹியரபுல் கருவி மூலமாக, நம் மூளைக்கு தகவல்களை அனுப்பவும், அதேசமயம் மூளையிலிருந்து தகவல்களை வாசிக்க அல்லது எடுக்கவும் முடியும் என்று கூறப்படுவது இங்கு கவனிக்கத்தக்கது.

உதாரணமாக, இந்த ஹியரபுல் கருவியானது, நம்முடைய மூளையில் இருக்கும் உயிரியல் சமிக்ஞைகளை கண்காணிப்பதன் மூலம், நாம் எப்போது உணர்ச்சிவசப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறோம் என்று கண்டறிந்து, அத்தகைய சமயங்களில் நமக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் ஒலி, சப்தங்களை தடை செய்து, நாம் கேட்க விரும்பும் ஒலிகளை மட்டும் நம் காதுக்குள் அனுப்பும் என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில், நம் உணர்வுகளை புரிந்துகொண்ட அதற்கு ஏற்றார்போல் நமக்கு ஒத்தாசையாக இருக்கும் நண்பர்கள் அல்லது சக மனிதர்கள் போல செயல்படும் அசாத்திய திறன் இந்த ஹியரபுல் கருவிக்கு உண்டு என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி பாப்பி க்ரம்.

இந்த ஹியரபுல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் உலகின் பல ஆய்வுக்குழுக்களின் முன்னேற்றங்களை வைத்துப் பார்க்கும்போது, ஹியரபுல் போன்ற மூளை-கம்ப்யூட்டர் இடைமுகக் கருவிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூட மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்கிறார் பாப்பி. வருங்காலத்தில் ஹியரபுல் போன்ற ஸ்மார்ட் கருவிகள் நம்முடைய வாழ்க்கைத் துணையாகவே மாறிவிடும் என்று ஆச்சரியப்படுத்துகிறார் அவர்.

- தொகுப்பு: ஹரிநாராயணன்


Next Story