சேலத்தில் பரபரப்பு தி.மு.க. பிரமுகர் காரில் கடத்தல் மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
சேலத்தில் தி.மு.க. பிரமுகரை மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சூரமங்கலம்,
சேலம் ஆண்டிப்பட்டி பனங்காடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 46). இவர், பனங்காடு கிளை தி.மு.க. செயலாளராக உள்ளார். மேலும், தனது வீட்டிலேயே நிதி நிறுவனம் மற்றும் ஏலச்சீட்டும் நடத்தி வருகிறார். இதுதவிர, வெள்ளி தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இவரிடம் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் மாத சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வருகிறார்கள்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இவரும், அதே பகுதியை சேர்ந்த நண்பர் நேரு (40) என்பவரும் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்து உள்ளனர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, சிவதாபுரம் செல்லும் வழியில் உள்ள ரெயில்வே தரைப்பாலம் பகுதியில் சென்றபோது, அவ்வழியாக வந்த ஒரு கார் இவர்களை வழிமறித்து நின்றது. பிறகு அந்த காரில் இருந்து இறங்கிய 5-க்கும் மேற்பட்டோர் நாகராஜன், நேரு ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.
மேலும், அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நேரு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிறகு நாகராஜனை அவர்கள் காரில் ஏற்றி கடத்தி சென்றனர். அந்த கார், சித்தர் கோவில் வழியாக வேகமாக சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக சூரமங்கலம் போலீசாருக்கு நேரு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும், அவர்கள் சித்தர்கோவில் மெயின்ரோட்டில் கார் நிற்கிறதா? என்று சோதனையிட்டனர். ஆனால் கடத்தல் கும்பல் எங்கு சென்றது? என்று தெரியவில்லை. இதனால் கந்தம்பட்டி, பனங்காடு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நாகராஜன் நிதி நிறுவனம் மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வருவதால் பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் கடத்தப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இவர், கடனாக கொடுக்கும் பணத்திற்கு அதிக வட்டி வசூலித்து வந்ததாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் அவரை கடத்தி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும், நாகராஜனை கடத்தி சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சேலத்தில் நண்பரை தாக்கிவிட்டு தி.மு.க. பிரமுகரை காரில் மர்ம கும்பல் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story