நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரே நாளில் 4 காதல் ஜோடிகள் தஞ்சம்

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் 4 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தன.
நாமக்கல்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் சதீஸ்குமார் (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார். சதீஸ்குமார், அவரது கல்லூரியில் பி.ஏ.படித்து வந்த கோவையை சேர்ந்த சஞ்சனாவை (20) காதலித்து வந்து உள்ளார். இதற்கு சஞ்சனாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து கடந்த 1-ந் தேதி இருவரும் சிவகாசிக்கு சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சஞ்சனாவின் பெற்றோர் கோவை துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இந்த நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி சதீஸ்குமாரும், சஞ்சனாவும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர்.
சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த லட்சுமணன் மகன் சுபாஷ் (26), நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரி மாணவி காவியாவை (21) காதலித்து வந்ததாகவும், கடந்த 7-ந் தேதி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே பெற்றோர் தங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி அவர்கள் இருவரும் நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர்.
இதேபோல் திருச்செங்கோட்டை சேர்ந்த மெக்கானிக் கவுரிசங்கர் (21) மற்றும் பள்ளிபாளையத்தை சேர்ந்த மேகாஸ்ரீ (20) ஆகியோர் கடந்த 10-ந் தேதியும், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த அஜித்குமார் (22) மற்றும் சிந்துஜா (21) ஆகியோர் கடந்த 7-ந் தேதியும் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறி, நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 4 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story






