சேலத்தில், பட்டா கேட்டு கரட்டில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்


சேலத்தில், பட்டா கேட்டு கரட்டில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 May 2019 10:00 PM GMT (Updated: 13 May 2019 6:24 PM GMT)

சேலத்தில் பட்டா கேட்டு கரட்டில் குடியேறி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், 

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட மூணாங்கரடு தண்ணீர் தொட்டி பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த இடத்துக்கு பட்டா கேட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் பொதுமக்கள் அருகில் உள்ள கரட்டில் குடியேறி நேற்று போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அவர்கள் அங்கு மனைகளை தாங்களாக பிரித்து கொண்டு கம்புகளை ஊன்றி திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அன்னதானப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறும் போது, ‘நாங்கள் இங்கு பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தற்போது இங்கு உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட இருப்பதால் எங்களை காலி செய்வதற்காக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே இங்கு அமைக்கப்பட உள்ள உரம் தயாரிக்கும் கூடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இந்த இடத்துக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்‘ என்றனர்.

அவர்களிடம் அதிகாரிகள், தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இதுகுறித்து எதுவும் செய்யமுடியாது என்றும், வருகிற 23-ந் தேதிக்கு பின்னர் உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story