5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்? தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு


5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்? தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
x
தினத்தந்தி 13 May 2019 11:15 PM GMT (Updated: 13 May 2019 6:40 PM GMT)

5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்? என அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடி பேசினார்.

அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து நேற்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். வெஞ்சமாங்கூடலூர், குரும்பப்பட்டி சந்தை, இனங்கனூர், வேலம்பாடி அண்ணாநகர், பள்ளப்பட்டி ஷாநகர், குப்பம் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் திறந்தவேனில் நின்றபடி அவர் பேசினார்.

பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அரவக்குறிச்சியில் தற்போது வருகிற சட்டமன்ற இடைத்தேர்தல் யாரால் வந்தது? என்று உங்களுக்கு நன்றாக தெரியும். அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும். கவிழ்க்க வேண்டும் என்று சதி செய்த சதிகாரர்களால், துரோகிகளால்தான் நாம், இந்த இடைத்தேர்தலை சந்திக்கிறோம். அதே சதிகாரர், துரோகி, கட்சி மாறி இன்று திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக (செந்தில் பாலாஜி) இங்கு போட்டியிடுகிறார். அவர், இதுவரை 5 கட்சிக்கு போய் இருந்தவர்.

முதலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் தொடங்கி, அடுத்து திராவிட முன்னேற்ற கழகத்திற்கு போய் கவுன்சிலராகி, அங்கும் விசுவாசம் இல்லாமல் வெளியேறி, அ.தி.மு.க.வுக்கு வந்து அம்மாவின் கருணையால் எம்.எல்.ஏ. ஆகி அமைச்சரானவர். மக்களையே சந்திக்காமல், இந்த பகுதியைகூட வந்து பார்க்காமல் இருந்தவருக்கு, கரூர் மாவட்ட அமைச்சர் என்ற அந்தஸ்தை கொடுத்தும்கூட அரவக்குறிச்சி மக்களுக்கு எந்தவித திட்டத்தையும் நிறைவேற்றாதவர் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி.

அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறிய பின்னர், அ.ம.மு.க. என்ற கட்சியை தொடங்குவதற்கு துணைபோய், அங்கும் விசுவாசமில்லாமல் வெளியேறி தற்போது தி.மு.க.வில் ஐக்கியமாகி தி.மு.க. தலைவர் ஸ்டாலினால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தற்போது நம்ம வேட்பாளரை எதிர்த்து நிற்கிறார்.

5 ஆண்டுகளில் 3 கட்சிக்கு போன ஒரே நபர் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜிதான். 5 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவி முடியும் முன்பே முதலில் இரட்டை இலையில் நின்றவர், தற்போது 2-வது முறையாக தி.மு.க. சின்னத்தில் நிற்கிறார். தமிழ்நாட்டிலேயே 5 ஆண்டுகளில் 2 கட்சிகள் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட ஒரே நபர் செந்தில்பாலாஜிதான். இருக்கிற இடத்தில் விசுவாசமாக இல்லாத ஒருவர், உங்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார்? என்பதை வாக்காளர்கள் எண்ணிப்பாருங்கள்.

ஒரு கட்சியில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவரது வெற்றிக்காக குறைந்தது 15 ஆயிரம் பேர் இரவு-பகல் பாராமல் தேர்தல் பணியாற்றினால்தான் வெற்றிபெற முடியும். அப்படி இங்குள்ள மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்தது அம்மா ஜெயலலிதாவுக்குத்தான். அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து, விலாசம் கொடுத்தது அ.தி.மு.க. மற்றும் அம்மா. அமைச்சர் பதவி கொடுத்து கவுரவித்த கட்சிக்கு இன்று துரோகம் செய்து விட்டு வெளியில் போய் உள்ளார். இப்படி, பதவி கொடுத்து அழகுபார்த்த கட்சிக்கு துரோகம் செய்தவர், உங்களுக்கு எப்படி நன்மை செய்வார்?. அப்படி கவுரவித்த கட்சியை உடைக்க வேண்டும், கவிழ்க்க வேண்டும் என்று எண்ணும் செந்தில்பாலாஜி எப்படி சாதாரண மக்களுக்கு நன்மை செய்வார். நான் கேட்டவரை, அவர் அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

கடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் நின்றார். அப்போதும் மக்களை சந்தித்து நன்றி சொல்லவில்லை. ஆனால், ஜெயலலிதாவால் ஆதரவு பெற்ற நமது வேட்பாளர் செந்தில்நாதன், எல்லா இடத்திலும் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு நன்றி சொன்னவர். எனவே, இவர் சிறந்தவரா? அவர் சிறந்தவரா? என நீங்கள் எடை போட்டு பாருங்கள். எதற்காக சொல்கிறேன் என்றால், பாத்திரம் அறிந்துதான் பிச்சை போட வேண்டும் என்று சொல்வார்கள். ‘ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுதான் பதம்’. ஆகவே, ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்பதை வாழ்க்கையை பார்த்தே தெரிந்து கொள்ளலாம். நமது வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி, தோல்வி முக்கியமல்ல. வாக்களித்த மக்கள்தான் முக்கியம் என நினைப்பவர்.

இங்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆசியோடுதான் செந்தில்பாலாஜி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை நல்லவர், சிறந்தவர் என ஸ்டாலின் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்து வருகிறார். இதே ஸ்டாலின்தான் அவரை பற்றி 2.4.2013 அன்று சட்டமன்றத்தில் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது செந்தில்பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். ஆங்கில பத்திரிகை ஒன்றில் போக்குவரத்து துறையில் ரூ.200 கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளதே என ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார். அங்கு பிரச்சினை ஏற்பட்டு வெளிநடப்பு செய்த ஸ்டாலின், பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்தார்.

ஸ்டாலின் என்ன சொன்னார் என்றால், ஆள் கடத்தல் வழக்கில் சிக்கி உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி எனது தகுதி பற்றி பேசினார், என்று தெரிவித்தார். இது அவருடைய கட்சி பத்திரிகையான முரசொலியில் வந்துள்ளது. (அப்போது முரசொலி பத்திரிகை நகலை எடப்பாடி பழனிசாமி காண்பித்தார்) ஆள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள செந்தில்பாலாஜி என வாக்குமூலம் கொடுத்த மு.க.ஸ்டாலின்தான் இன்று அவர் நல்லவர், வல்லவர், திறமையுள்ளவர். அவருக்கு ஓட்டு போடுங்கள் என கேட்கிறார். அவரே பேசியது சட்டமன்றத்தில் பதிவாகி உள்ளது. எனவே, ஆள்கடத்தல் சம்பந்தப்பட்ட தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கா உங்கள் ஓட்டு?. செந்தில்பாலாஜியை ஆள்கடத்தல் பேர்வழி என்று சொல்லி பேசிய மு.க.ஸ்டாலினின் நாக்கு, இன்று மாற்றி பேசுகிறது. எனவே, நாட்டு மக்கள் அந்த கட்சி தலைவர் எப்படி இருக்கிறார் எனவும் எண்ணி பார்க்க வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியில்தான் இன்றைக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். நான், இங்கு முதல்-அமைச்சராக வந்து பேசவில்லை. சாதாரண தொண்டனாக இருந்து உங்கள் முன் பேசுகிறேன்.

ஸ்டாலின் சொல்கிறார், அவர் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்காராம். சிவப்பாகவும் இருக்கிறாராம். எப்படி வேணாலும் இருக்கட்டும். தேர்தல் சுற்றுப்பயணம் போனதால் சற்று கருப்பாகி விட்டதாக மதுரை கூட்டத்தில் பேசி உள்ளார். ஸ்டாலின் சொகுசான வாழ்க்கை வாழ்பவர். மழையில் நனைந்ததும் கிடையாது. வெயிலில் காய்ந்ததும் கிடையாது. இங்குள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் மழையில் நனைந்து, வெயிலில் கருகி உழைக்கின்றவர்கள். விவசாயிகளின் எண்ணத்தை நீங்கள் நிறைவேற்றியதுண்டா?. ஒரு நாள் வெயிலில் நின்று பாருங்கள். விவசாயிகள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என தெரியும். எனவேதான், ஸ்டாலின் வந்த வழிவேறு. நாங்கள் வந்த வழிவேறு. நாங்கள் உழைப்பால் இந்த பதவியை பெற்றுள்ளோம். ஸ்டாலின் அவரது தந்தை போர்வையில், குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். எனவேதான், ஸ்டாலினுக்கு உழைப்பாளிகள் பற்றி கவலைக்கிடையாது.

தமிழர்களுக்கு தைப்பொங்கல் விசேஷமான நாள். அதை சிறப்பாக கொண்டாட அனைத்து குடும்ப அட்டைக்கு ரூ.1000 பரிசுத்தொகை வழங்கினோம். அனைவருக்கும் பாகுபாடு இல்லாமல் போய்சேர்ந்தது. உடனே ஸ்டாலின், நீதிமன்றத்துக்கு தடையாணை வாங்க சென்றார். அதேபோல அனைத்து தொழிலாளர், நெசவாளர் குடும்பத்துக்கும் ரூ.2 ஆயிரம் கொடுக்கப்படும் என அறிவித்தோம். அதற்கும் நீதிமன்றம் சென்றீர்கள். மேலும் தேர்தல் ஆணையத்திற்கு சென்று நிறுத்தி வைத்தீர்கள். இவர்களா ஏழைகளை காப்பாற்றுபவர்கள்?.

கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு திட்டம் கரூர் மாவட்டத்தில்தான் இணைகிறது. எனவே, கரூர் மாவட்ட மக்கள் நதிகள் இணைப்பு மூலம் கூடுதல் நன்மை பெறுவார்கள். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதை ஒன்றுகூட நிறைவேற்ற முடியாது. அதில் கூறப்பட்ட அத்தனையும் பொய்.

அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு இலவசமாக 3 சென்ட் நிலம் தருவதாக செந்தில்பாலாஜி சொல்லி உள்ளார். எங்கிருந்து கொடுப்பார்?. உடனே, ஸ்டாலின் சொல்கிறார், சகோதரர் செந்தில்பாலாஜி 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலம் இலவசமாக தருவார் என்கிறார். எங்கய்யா நிலம் இருக்கு?. அப்படி கொடுப்பதானால், 1,100 ஏக்கர் நிலம் தேவை. இவர் சொந்தமாக வாங்கி கொடுப்பாராம். அப்படி வாங்கி கொடுக்க எங்கே நிலம் உள்ளது. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என பாருங்கள்.

ஏற்கனவே, தி.மு.க. தலைவர் கருணாநிதி இருக்கும்போது, பொதுத்தேர்தலில் தி.மு.க. சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள். அப்போது நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். எத்தனை பேருக்கு கொடுத்தீர்கள்?. எல்லாம் நாமம்தான் போட்டு போனார்கள். சுடுகாட்டுக்குகூட நிலம் கொடுக்க வில்லை. இப்படி ஏமாற்று பேர்வழிகள், மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நடத்துகிற நாடகம் இது.

அதே வேளையில், அ.தி.மு.க. அரசு தொடர்ந்து வீட்டுமனை இல்லாத குடும்பத்துக்கு இலவச வீட்டுமனை கொடுத்து கொண்டுதான் இருக்கிறது. எனவே, நாங்கள் சொல்கின்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும். இடம் கொடுக்க அவர் யாரிடம் கொண்டு மனுவை கொடுப்பார்?. என்னிடம்தான் அவை வந்தாக வேண்டும். எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் எப்படி இதை நிறைவேற்ற முடியும். எந்த திட்டமானாலும் அரசின் கவனத்துக்கு வந்தால்தான் நிறைவேற்ற முடியும். எனவே, சிந்தித்து பாருங்கள்.

செந்தில்பாலாஜி சாதாரண ஆள் கிடையாது. நான்கே மாதத்தில் ஒரு கட்சிக்கு சென்று பொறுப்பு வாங்கி, அந்த கட்சியிலேயே வேட்பாளராக நிற்கிறார் என்றால் எண்ணிப்பாருங்கள். அந்த கட்சிக்காக எத்தனைபேர் தியாகம் செய்தார்கள். எத்தனைபேர் ஆண்டாண்டு காலமாக தி.மு.க. கட்சிக்கு உழைத்தார்கள். அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு, அந்த கட்சியில் அவர் மாவட்ட பொறுப்பாளர். அதே கட்சி சார்பில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறார் என சொன்னால், நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

நமது வேட்பாளர் செந்தில்நாதன் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவி செய்பவர். எனவே, அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். ஏனென்றால், இந்த இயக்கம்தான் உங்களுக்கு துணை நிற்கும். இந்த இயக்கம்தான் உங்களது பிரச்சினைகளை தீர்க்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசாரத்தின்போது, அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செங்கோட்டையன், தங்கமணி, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அரவக்குறிச்சி அ.தி.மு.க.வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி ஷா நகரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சிறுபான்மையின மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இந்த அரசு இருக்கிறது. முஸ்லிம்களின் கோரிக்கைகளை நிலைநாட்டுகிற, நிறைவேற்றுகிற அரசு இந்த அரசு. தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதாகும். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களது கொள்கையில் இருந்து என்றும் மாறுபட மாட்டோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த கொள்கைகளை தொடர்ந்து நாங்கள் கடைபிடிப்போம். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முதலில் அறிவித்தவர் மு.க.ஸ்டாலின் தான். தேர்தல் இன்னும் முடியவில்லை. வாக்கு எண்ணிக்கை கூட நடந்து முடியவில்லை. ஆனால் சந்திரசேகரராவை, மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். தேர்தல் முடிவதற்குள்ளே ஸ்டாலின் வேறு திசையில் செல்கிறார். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. சொன்னதை செய்வோம். செய்வதை தான் சொல்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பள்ளப்பட்டி ஷாநகரில் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கிருந்த முஸ்லிம் பெண்கள் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து, பூங்கொத்து கொடுத்தனர். அப்போது முஸ்லிம்கள் அணியும் தொப்பியை அவர் அணிந்து கொண்டார்.

Next Story