ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் சாமி தரிசனம்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 13 May 2019 11:00 PM GMT (Updated: 13 May 2019 6:48 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

திருச்சி,

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு அவர் தனது குடும்பத்தினருடன் தனி விமானம் மூலம் திருச்சி வந்தார்.

திருச்சி சங்கம் ஓட்டலில் தங்கி இருந்த சந்திரசேகரராவ், நேற்று காலை 11.15 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலுக்கு குடும்பத்தினருடன் காரில் சென்றார். அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ரங்கா கோபுரத்தில் இருந்து பேட்டரி கார் மூலம் கோவில் உள்ளே அழைத்து செல்லப்பட்டார். முதலில் கருடாழ்வார் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் ஆரியபட்டாள் வாசல் வழியாக மூலஸ்தானம் சென்று ரங்கநாதரை வழிபட்டார்.

சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த சந்திரசேகரராவ் கூறுகையில், “எனது வாழ்க்கையில் முதன் முறையாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்துள்ளேன். சாமி தரிசனம் மனதுக்கு ஆறுதலாக இருந்தது” என்றார்.

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சந்திரசேகரராவ் வந்ததையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்னர் மதியம் 12.30 மணிக்கு தனி விமானம் மூலம் அவர் சென்னை புறப்பட்டு சென்றார். 

Next Story