முறைகேடாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 14 மின் மோட்டார்கள் பறிமுதல்


முறைகேடாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 14 மின் மோட்டார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 May 2019 4:00 AM IST (Updated: 14 May 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் முறைகேடாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 14 மின் மோட்டார்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அந்தந்த வார்டு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு, பொது குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பருவமழை போதிய அளவில் பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விருத்தாசலம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க விருத்தாசலம் நகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக பொது குழாய்களில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதை தடுப்பதற்காக நகராட்சி பொறியாளர் பாண்டு, உதவி பொறியாளர் வள்ளி ஆகியோர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ஜெயில் தெரு, தெற்கு பெரியார் நகர், செல்வராஜ் நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 14 வீடுகளில் உள்ள குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் 14 மின் மோட்டார்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் நகராட்சிக்கு குடிநீர் வரி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி பொறியாளர் பாண்டு கூறுகையில், நகராட்சிக்கு முறையாக குடிநீர் மற்றும் வீட்டுவரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். குடிநீர் குழாய்களின் முறைகேடாக மின்மோட்டார்கள் பொருத்தி குடிநீரை உறிஞ்சினால், மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story