தனியார் சர்க்கரை ஆலைகளின் நிர்வாகியை கைது செய்யக்கோரி கடலூரில், கரும்பு விவசாயிகள் திடீர் போராட்டம் -அய்யாக்கண்ணு தலைமையில் நடந்தது
மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலைகளின் நிர்வாகியை கைது செய்யக்கோரி கடலூரில் கரும்பு விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
பெண்ணாடம், வேப்பூர் அருகே ஏ.சித்தூரில் உள்ள 2 தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்ததற்கான தொகையை முழுமையாக கொடுக்காமல் பாக்கி வைத்திருப்பதாகவும், விவசாயிகள் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கடன் வாங்கி ரூ.88 கோடியே 51 லட்சம் மோசடி செய்ததாகவும் புகார் கூறப்பட்டது.
இது பற்றி மங்களூர் கச்சிமயிலூர் விவசாயி ஸ்டாலின் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சர்க்கரை ஆலைகளின் நிர்வாக இயக்குனர் சென்னையை சேர்ந்த தியாகராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தியாகராஜனை கைது செய்யக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுப்பதற்காக நேற்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில செயலாளர் சக்திவேல், மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் சுகனபூசனன், விவசாயி ஸ்டாலின் உள்பட கரும்பு விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றம் அருகில் உள்ள சாலையில் திரண்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பால்சுதர், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியசோபிமஞ்சுளா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளிடம் 5 பேர் மட்டும் போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து மனு கொடுங்கள். மற்றவர்கள் வெளியில் காத்திருக்குமாறு கூறினர். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர்.
அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியசோபி மஞ்சுளா, மோசடி தொடர்பாக முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்த இருக்கிறோம். ஆகவே குற்றவாளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் விவசாயிகள் இது பற்றி போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து மனு அளிப்போம் என்றனர்.
அதற்கு 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. பின்னர் அய்யாக்கண்ணு தலைமையில் கரும்பு விவசாயிகள் நீதிமன்றம் அருகில் உள்ள சாலையில் அமர்ந்து திடீரென போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில், விவசாயிகள் பெயரில் மோசடி செய்த சர்க்கரை ஆலைகள் நிர்வாகி, கரும்பு ஆலை அதிகாரிகள், வங்கி அதிகாரிகளை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் ஏமாற்றப்பட்ட எங்களை கைது செய்யுங்கள் என்று கோஷமிட்டனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அய்யாக்கண்ணு உள்பட 5 பேர் மட்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனை சந்தித்து மனு அளித்து பேசினர்.
அதன்பிறகு போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவு வாசலுக்கு வந்து, அங்கிருந்த விவசாயிகள் மத்தியில், இந்த பிரச்சினைக்கு 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதையடுத்து விவசாயிகள் தங்களுக்கு நேர்ந்த பிரச்சினைகள் குறித்து எடுத்துக்கூறினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
இது பற்றி அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறுகையில், கரும்பு விவசாயிகளின் பெயரில் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வங்கி மேலாளர், கார்ப்பரேட் மேலாளர், சர்க்கரை ஆலை நிர்வாகி, அலுவலர்களை கைது செய்ய வேண்டும். இல்லையெனில் சென்னை சர்க்கரை துறை ஆணையர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவோம் என்றார்.
Related Tags :
Next Story