தூத்துக்குடியில் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அ.தி.மு.க. ஆட்சியை மன்னிக்க கூடாது கனிமொழி எம்.பி. பேச்சு
தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய அ.தி.மு.க. ஆட்சியை மன்னிக்க கூடாது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் நேற்று மாலையில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தளவாய்புரம், புளியம்பட்டி, மருதன்வாழ்வு, கொல்லங்கிணறு, கொத்தாளி, இளவேலங்கால், ஓசநூத்து ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பல இடைத்தேர்தல்கள் வரும். இடைத்தேர்தல் ஆட்சியை மாற்றி விடுமா? என்று நினைப்போம். ஆனால் தற்போது 18 தொகுதி இடைத்தேர்தல் முடிந்து உள்ளது. 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நீங்கள் நினைத்தால் இடைத்தேர்தலிலேயே ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும். இந்த ஆட்சி போதும், போதும் என்ற நிலைக்கு தமிழக மக்கள் வந்து விட்டார்கள். எப்போது இந்த ஆட்சியை தூக்கி போட வேண்டும் என்ற உணர்வு அனைவரது மனதிலும் உள்ளது. நாங்கள் எங்கு சென்றாலும், இந்த ஆட்சி எப்போது முடியும். தி.மு.க. ஆட்சி எப்போது வரும் என்று கேட்கக்கூடிய நிலை தமிழகம் முழுவதும் உள்ளது. ஏனென்றால், இந்த 2½ ஆண்டு ஆட்சியில் மக்கள் படாத பாடு இல்லை. ரேஷன்கடையில் பொருட்கள் இல்லை. வேலைவாய்ப்பு இல்லை. முதியோர் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. 100 நாள் வேலையும் கிடைக்கவில்லை. குடிநீர் பிரச்சினை உள்ளது. ஒருகுடம் தண்ணீர் ரூ.10 கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. மோடி ஆட்சியில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டத்தை மக்கள் நியாயம் கேட்டு நடத்தினார்கள். அவர்களை அழைத்து பேசி இருக்கலாம். ஆனால் அமைதியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஆட்சி எடப்பாடி பழனிசாமி ஆட்சி. வெறித்தனமாக ஒரு அரசே 13 பேரை சுட்டுக் கொலை செய்து உள்ளது. இந்த ஆட்சியில் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. கேள்வி கேட்டால் அவர்களுக்கு பதில் தெரியாது. இந்த ஆட்சியை நாம் மன்னிக்க கூடாது. இந்த உறுதி ஒவ்வொருவரின் மனதிலும் இருக்க வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி தரக்கூடியவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதை உணர்ந்து தி.மு.க.வுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சண்முகையாவை வெற்றி பெறச் செய்யுங்கள். இந்த ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்கு நல்லது செய்து இருப்பதாக எதையும் கூற முடியாது. தி.மு.க. ஆட்சியில் மாணவர்களுக்கு விடுதி கட்டித்தரப்பட்டது. பள்ளிக்கூடத்துக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தரப்பட்டது. மக்கள்விடுத்து உள்ள கோரிக்கைகளும் நிறைவேற்றித் தரப்படும். விவசாய கடன்கள் ரத்து செய்து தரப்படும். மாணவர்கள் கல்விக்கடன் ரத்து, 5 பவுனுக்கு குறைவான நகைக்கடன் ரத்து, கேபிள் டி.வி. கட்டணம் குறைப்பு, கியாஸ் விலை குறைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தின் போது, தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story