“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது” அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது” அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 May 2019 3:15 AM IST (Updated: 14 May 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது” என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி,

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் நடைபெறுகிற சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிக்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கனவு நிறைவேறப்போவது இல்லை.

கடந்த ஒரு மாத காலமாக அவரது பிரசாரத்தை பார்த்தோம். அவரது பிரசாரம் எல்லாம் வளர்ச்சியை பற்றியோ, திட்டங்களை பற்றியோ, தமிழ்நாட்டை பற்றியோ இல்லை. எங்களை திட்டுவது, முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், பிரதமரை திட்டுவதையே வாடிக்கையாக கொண்டு உள்ளார். மக்கள் அவர் மீது வெறுப்பு அடைந்து உள்ளனர். அதே போன்று டி.டி.வி.தினகரன், தி.மு.க.வுக்கு சாதகமாக நடப்பதாக மக்கள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் எங்கள் அணிக்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் கொடுக்கப்போகிறார்கள்.

காவிரி டெல்டா பகுதியில் வேதாந்தா நிறுவனத்துக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க முதல் கட்ட பணிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் கருத்து கேட்க வேண்டும். சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த வேண்டும். 274 ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மாநில அரசு அனுமதி அளிக்கக்கூடாது. முதல்-அமைச்சரை சந்தித்து நிச்சயமாக அழுத்தம் கொடுத்து, டெல்டா பகுதி வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டவடிவம் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம். தேவைப்பட்டால் போராடுவோம்.

காவிரி டெல்டா பகுதி நமக்கு உணவு அளிக்கும் மண். அந்த மண்ணை பாதுகாக்க வேண்டும். நம் வருங்கால சந்ததியினருக்கு அதனை விட்டு செல்ல வேண்டும். இங்கு ஹைட்ரோ கார்பன், மீத்தேன் என்று எந்த எரிவாயு திட்டமும் வரக்கூடாது. அது விவசாயத்துக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். இதற்கு மத்திய அரசையும், மாநில அரசையும் வலியுறுத்தி, திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம்.

தி.மு.க.வுக்கு தோல்வி பயம் உள்ளது. ராகுல்காந்தி தான் பிரதமர் என்று கூறிய மு.க.ஸ்டாலின், தற்போது சந்திரசேகர்ராவை சந்திக்கிறார். 3-வது அணிக்கு விதை போடுகிறார். அந்த அணி மிகுந்த குழப்பத்தில் உள்ளது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

நல்லகண்ணு, கக்கன் வாரிசுகளுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வீடு வழங்க வேண்டும். தாமிரபரணி உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடலில் கலக்கும் தண்ணீரை பயன்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டப்பிடாரம் தொகுதியில் விவசாயிகள் பிரச்சினை, நீர் பற்றாக்குறை தீர்க்கப்பட வேண்டும். தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும், தூத்துக்குடி-மதுரை தொழில் வழித்தடம் அமைத்தால், அந்த பகுதி வளர்ச்சி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story