மலைரெயில் பாதையில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை


மலைரெயில் பாதையில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 14 May 2019 3:45 AM IST (Updated: 14 May 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

மலைரெயில் பாதையில் சுற்றுலா பயணிகள் அத்துமீறி வருகிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

குன்னூர்,

மலைப்பிரதேசமான நீலகிரியில் சுற்றுலா தலங்களுக்கு பஞ்சம் இல்லை. இந்த சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். நீலகிரியின் குளு, குளு காலநிலையை அனுபவிக்கும் சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் பயணம் செய்ய மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மலைகளை குடைந்து பாதை அமைக்கப்பட்டு, மலைரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த பாதை குறுகிய மீட்டர் கேஜ் பாதையாக உள்ளது.

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே கல்லாறில் இருந்து மலைரெயில் பாதை தொடங்குகிறது. மலைரெயிலின் பாதுகாப்பு கருதி கல்லாறில் இருந்து குன்னூர் வரை பல்சக்கர தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது. மலைரெயில் பாதையில் குகைகளும், பாலங்களும் அமைய பெற்றுள்ளன. ஒருசில பாலங்களில் தண்டவாளத்தின் நடுவில் ஜல்லிக்கற்கள் நிரப்பப்படாமல், ‘ஸ்லீப்பர்‘ கட்டைகள் மட்டுமே பொருத்தப்பட்டு உள்ளன.

இந்த பாலங்களில் ரெயில்வே ஊழியர்கள் தவிர மற்றவர்கள் சுலபமாக நடந்து செல்ல முடியாது. ஏனெனில் ‘ஸ்லீப்பர்‘ கட்டைகளுக்கு இடையே ஜல்லிக்கற்கள் போடப்படாததால், அதன் மீது நடப்பவர்கள் கீழே பார்க்கும்போது தலைசுற்றல் ஏற்பட்டு தவறி விழும் அபாயம் உள்ளது. இதுபோன்ற பாலங்கள் மலைரெயில் பாதையில் உள்ள காட்டேரி, ரன்னிமேடு, விக்கிமரம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. குறிப்பாக ரன்னிமேடு பகுதியில் உள்ள பாலத்தில் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அத்துமீறி நடந்து செல்கின்றனர். இவ்வாறு நடந்து செல்லும்போது, சிறிது தடுமாறினாலும் பாலத்தில் இருந்து தவறி கீழே விழும் அபாயம் இருப்பதை அவர்கள் உணருவது இல்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

காட்டேரி பூங்காவுக்கு அருகில் ரன்னிமேடு ரெயில் நிலையம் அமைந்து உள்ளது. இதனால் பூங்காவை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் ரன்னிமேடு ரெயில் நிலையத்தையும் பார்வையிட வருகின்றனர். அவ்வாறு பார்வையிடும் ஒருசில சுற்றுலா பயணிகள் அங்குள்ள பாலத்தில் நடந்து செல்வதை விரும்புகின்றனர். இது ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். எனவே அவர்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இனிமேல் மலைரெயில் பாதையில் உள்ள அந்த பாலத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story