சங்க அலுவலகத்தை காலி செய்ய வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
சங்க அலுவலகத்தை காலி செய்ய வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
சேலம்,
சேலம் கோரிமேடு ஏ.டி.சி. நகரில் குடியிருக்கும் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சிலர் நேற்று அந்த பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணியாளர் வீடு கட்டும் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து அவர்கள் கூறும்போது, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தொழிலாளர்கள் வீடு கட்டிக்கொள்ள கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் வழங்கப்பட்டது. இந்த கடனை பெற்று நாங்கள் ஏ.டி.சி. நகர் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகிறோம். கடனை வசூலிப்பதற்காக, அரசு போக்குவரத்து கழக பணியாளர் வீடு கட்டும் சங்கம் தொடங்கப்பட்டு, இதன் அலுவலகம் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டது. தற்போது இந்த கடன் முழுவதும் வசூலிக்கப்பட்டு விட்டது.
எனவே சங்க அலுவலகத்தை காலி செய்யுமாறு நிர்வாகிகளிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர்கள் இடத்தை காலி செய்யவில்லை. சங்க அலுவலகத்தை காலி செய்ய வலியுறுத்தி தற்போது முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்று கூறினர். இது குறித்து தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.