முடிகொண்டான் ஆற்றின் கரையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்


முடிகொண்டான் ஆற்றின் கரையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 14 May 2019 4:00 AM IST (Updated: 14 May 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

திட்டச்சேரி அருகே முடிகொண்டான் ஆற்றின் கரையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே கொத்தமங்கலம் ஊராட்சி அனந்தநல்லூரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் முடிகொண்டான் ஆறு உள்ளது. இந்த ஆற்றை அனந்தநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தனர். அனந்தநல்லூர், கோதண்டராஜபுரம், கொத்தமங்கலம், காலனி தெரு, சிவன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் நிரவி வழியாக காரைக்கால் செல்வதற்கு இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆற்றின் கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகள் அகற்றப்படாமல் பல மாதங்களாக தேங்கி கிடக்கின்றன. மேலும் குப்பைகள் காற்றின் வேகத்தில் சரிந்து ஆற்று நீரில் கலப்பதால், தண்ணீர் கருப்பு நிறமாக மாறி மாசுபடிந்து காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் முடிகொண்டான் ஆற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. இவ்வழியாக நடந்து செல்வோர் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை உள்ளது.

நடவடிக்கை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிகொண்டான் ஆற்றின் கரையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி விட்டு, அதே இடத்தில் குப்பை தொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story