ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மீது கல்வீசி தாக்குதல் சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது


ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மீது கல்வீசி தாக்குதல் சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 13 May 2019 10:15 PM GMT (Updated: 13 May 2019 8:43 PM GMT)

மயிலாடுதுறையில், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கல்வீசி தாக்கப்பட்டார். இதுகுறித்து சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் பண்பு பயிற்சி முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பண்பு பயிற்சி முகாம் மயிலாடுதுறை காந்திஜிரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த மாதம் (ஏப்ரல்) தொடங்கியது. அதன் நிறைவு விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தஞ்சை மாவட்ட பொறுப்பாளரான திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த துரைசண்முகம் (வயது 70) என்பவர் பள்ளியின் வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்தார். நள்ளிரவு சுமார் 3 மணி அளவில் அந்த வழியாக 8 மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல், துரைசண்முகத்தின் மீது கல்வீசி தாக்கினர். இதில் காயம் அடைந்த துரைசண்முகம், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து துரைசண்முகம் கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் மயிலாடுதுறை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

கைது

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வெள்ளையன், வெங்கடேசன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே வடகரை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தமிமுன் அன்சாரி மகன் அப்துல் பாசித் ரகுமான் (19), அதே பகுதியை சேர்ந்த முகமதுசலீம் மகன் முகமது சபீக் (19), சகாபுதீன் மகன் முகமதுஜாசிக் (19), 3 சிறுவர்கள் மற்றும் சிலர் சேர்ந்து துரைசண்முகத்தை கல்வீசி தாக்கிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

Next Story