கடம்பூர் மலைப்பகுதியில் 3 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி எந்த பிரச்சினையும் இன்றி இயல்பாக நடக்கிறது

கடம்பூர் மலைப்பகுதியில் 3 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி எந்த பிரச்சினையும் இன்றி இயல்பாக நடக்கிறது.
டி.என்.பாளையம்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன் (வயது 58). விவசாயி. இவர் 5–க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளையும் வளர்த்து வருகிறார். இவருடைய வெள்ளாடு ஒன்று, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குட்டி ஈன்றது. ஆனால் அந்த குட்டி 3 கால்களுடன் அதிசயமாக பிறந்தது. அதாவது பின்னங்காலில் ஒரு கால் மட்டுமே உள்ளது.
இதைக்கண்டு வெள்ளையப்பன் அதிர்ச்சி அடைந்தார். சில நாட்களில் அது இறந்து விடுமோ? என்று அச்சம் அடைந்தார்.
ஆனால் அந்த வெள்ளாட்டுக் குட்டி இயற்கையின் பரிசாக நல்ல உடல் நலத்துடன் உள்ளது. 3 கால்களுடன் நடந்து சென்று தீவனம் மேய்வது, தண்ணீர் குடிப்பது என்று தன்னுடைய அடிப்படை தேவைகளை தானே நிறைவேற்றிக்கொள்கிறது. மேலும் தாயிடம் சென்று எந்த பிரச்சினையும் இல்லாமல் பால் குடிக்கிறது. இதனால் மலை கிராம மக்களை இந்த ஆட்டுக்குட்டி ஈர்த்துள்ளது. ஆட்டுக்குட்டியின் பின்னங்காலில் ஒரு கால் மட்டும் இருந்தாலும் தன்னுடைய உடல் எடையை தாங்கியபடி நடந்து செல்வது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.






