கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு தீர்த்தம் எடுக்க வந்தபோது பரிதாபம்
கொடுமுடி காவிரி ஆற்றுக்கு தீர்த்தம் எடுக்க வந்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
கொடுமுடி,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஜெய்நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. அவருடைய மனைவி லட்சுமி. இவர்களுடைய மகன் சூர்யா (வயது 20). ராமசாமி தனது குடும்பத்தினருடன் பழனிக்கு பாதயாத்திரை செல்ல முடிவு செய்தார். இதற்காக காங்கேயம் பகுதியை சேர்ந்த 20 பேருடன் தீர்த்தம் எடுக்க நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் மணல்மேட்டில் உள்ள காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.
இதில் சூர்யா மட்டும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. மேலும் அவருக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்ததும் அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே நீந்திச்சென்று சூர்யாவை மீட்டனர்.
மயங்கிய நிலையில் கிடந்த அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சூர்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தீர்த்தம் எடுக்க வந்தபோது ஆற்றில் மூழ்கி வாலிபர் இறந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.