சென்னையில் விஸ்வரூபம் எடுக்கும் தண்ணீர் பிரச்சினை


சென்னையில் விஸ்வரூபம் எடுக்கும் தண்ணீர் பிரச்சினை
x
தினத்தந்தி 13 May 2019 11:45 PM GMT (Updated: 13 May 2019 9:44 PM GMT)

சென்னையில் தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

சென்னை,

கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு என்பது தலைநகர் சென்னையில் எழுதப்படாத விதியாகி விட்டது. பருவமழை பொய்த்ததால் ஏரிகள் வறண்டு விளையாட்டு மைதானங்கள்போல காட்சியளிக்கிறது. கல் குவாரிகளை தொடர்ந்து, விவசாய கிணறுகளில் இருந்தும் குடிநீர் பயன்பாட்டுக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் சென்னையின் தினசரி குடிநீர் தேவையை பூர்த்தி செய்யமுடியாமல் குடிநீர் வாரியம் திண்டாடி வருகிறது.

நிலத்தடி நீர் வெகுவாக குறைந்ததால், தண்ணீர் லாரிகளை நம்பி மட்டுமே சென்னை மக்கள் காலம் தள்ள வேண்டிய அவல நிலை உள்ளது. லாரிகள் வந்தவுடன் கூட்டமாக சூழ்ந்து கடுமையான அமளிக்கிடையில் தண்ணீரை பிடித்து செல்கின்றனர்.

தண்ணீர் வருமா, வராதா?

வீட்டில் உள்ள குழாய்கள் தண்ணீர் இன்றி துருப்பிடிக்க தொடங்கி விட்டன. குழாய்களை திறந்தால் நடிகர் விவேக் ஒரு படத்தில் வேடிக்கையாக சொல்வது போன்று ‘உஷ்’ என்ற காற்றுச்சத்தம் மட்டும் பலமாக வருகிறது. தண்ணீர் இல்லாததால் பெரும்பாலான வீட்டில் உள்ள ‘வாஷிங் மெஷின்’களுக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்பட்டு வருகிறது.

அடிபம்பு குழாயடி தண்ணீரை மட்டுமே மக்கள் நம்பி இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் குழாயடியை தேடி குடும்பம் குடும்பமாக மக்கள் காலி குடங்களுடன் ஓடுவதை பார்க்க முடிகிறது. தண்ணீர் வருமா, வராதா? என்ற சிந்தனையிலேயே பெண்கள் தவித்து வருகிறார்கள்.

சென்னை மக்கள் புலம்பல்

வியாசர்பாடி, கொடுங்கையூர், பெரம்பூர், வில்லிவாக்கம், கொளத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு படாதபாடு படுத்துகிறது. அவ்வப்போது அடிபம்பு குழாய் களில் வரும் தண்ணீரும் மஞ்சள் நிறத்தில் வந்து மக்களை மேலும் சோதனைக்கு உள்ளாக்குகிறது. தற்போதைய சூழலில் பெரும் பாலான பகுதிகளில் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

விஸ்வரூபம் எடுத்துள்ள தண்ணீர் பஞ்சம் எப்போது தீரும் என்ற நிலையை எதிர்நோக்கி சென்னைவாசிகள் காத்திருக்கிறார்கள். ‘மற்ற ஊர்களில் எல்லாம் மழை பெய்கிறதே, இந்த சென்னை மட்டும் என்ன பாவம் செய்ததோ?’ என்ற எண்ணமே சென்னை மக்களின் புலம்பலாக அமைந்து வருகிறது.

Next Story