கிணற்றை தூர்வாரும் போது பரிதாபம் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி
காரைக்குடி அருகே கிணற்றை தூர்வாரும் போது விஷ வாயு தாக்கியதில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு போலீஸ் சரகத்தை சேர்ந்தது அரியக்குடி. இங்குள்ள கண்ணப்பர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 53). கூலித் தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருடன் அரியக்குடி மாதா கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கிணற்றை தூர்வார சென்றார்.
அப்போது பாண்டி கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி, மண்ணை தோண்டி தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்தநிலையில் கிணற்றின் உள்ளே சென்ற சிறிது நேரத்தில், கையை மேலும் கீழும் ஆட்டி கயிறை பிடித்து இழுத்து ஏதோ கூற முயற்சி செய்தாராம். இதை மேலே இருந்தவர்கள் பார்த்து கேட்ட போது, அவரால் எதுவும் பேச முடியவில்லை.
அதைத்தொடர்ந்து சண்முகம் தனது மகன் குமார் என்பவரை கிணற்றின் உள்ளே இறங்கி என்னவென்று பார்க்க கூறியதும், அவரும் கயிறு மூலம் கிணற்றின் உள்ளே இறங்கினார். அவர் உள்ளே சென்றதும் தனக்கு மூச்சு திணறுகிறது என்று கூறியதை தொடர்ந்து, காரைக்குடி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புவீரர்கள் வந்து கிணற்றில் இறங்கி பார்த்த போது விஷ வாயு பரவி உள்ளது தெரிந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புடன் கிணற்றில் இறங்கி பாண்டி மற்றும் குமார் இருவரையும் மேலே கொண்டு வந்தனர். அதில் விஷ வாயு தாக்கி பாண்டி இறந்தது தெரியவந்தது. ஆபத்தான நிலையில் இருந்த குமாரை காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.