வெளிநாட்டில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற கணவரின் கதி என்னவென்று தெரியாமல் தவிக்கும் பெண்

வெளிநாட்டில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற கணவரின் கதி என்வென்று தெரியாமல் தவித்துவரும் பெண் கணவரை கண்டுபிடித்துதரக்கோரி மனுகொடுத்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை பழனிவலசை பகுதியை சேர்ந்தவர் பாலுச்சாமி என்பவரின் மனைவி சரோஜா(45). இவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:– எனது கணவர் பாலுச்சாமி கடந்த 7 ஆண்டுகளுக்குமுன் குவைத் நாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்றார். அப்போது எனது மூத்த மகள் தேன்மொழிக்கு திருமணம் செய்து வைத்தோம். 10 பவுன் நகை போடுவதாக ஒப்புக்கொண்டு 5 பவுன் மட்டுமே போட முடிந்தது.
வெளிநாடு சென்று சம்பாதித்து கொடுப்பதாக கூறிவிட்டு எனது கணவர் சென்றார்.சில மாதங்கள் மட்டும் மாதம் ரூ.10 ஆயிரம் அனுப்பியவர் அதன்பின்னர் பணமும் அனுப்பவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் இல்லை. அவர் கதி என்ன, எங்கு இருக்கிறார் என்ற விவரங்கள் தெரியவில்லை.
இதுபோன்ற நிலையால் எனது மற்றொரு மகள், மகன் ஆகியோரை வளர்க்க சித்தாள் வேலைக்கு சென்று வருகிறேன். இதனிடையே ஒப்புக்கொண்டபடி மீதம் உள்ள நகையை போடாததால் எனது மூத்த மகள் தேன்மொழி விரட்டப்பட்டு என்னோடு வந்து தங்கியிருக்கிறார். இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் வேதனையில் உள்ளேன். எனவே, குவைத் நாட்டில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற எனது கணவரின் நிலையை கண்டறிந்து அவரை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.






