பயிர்இழப்பீட்டு தொகை வழங்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விவசாயிகள் மனு
பயிர் இழப்பீட்டு தொகை வழங்காவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கமுதி தாலுகா பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா மேலராமநதி குரூப் பகுதிக்கு உட்பட்ட ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– கமுதி தாலுகா மேலராமநதி குரூப் பகுதிக்கு உட்பட்ட கோரைப்பள்ளம், காவடிபட்டி, ரெட்டப்புளி, மேலாராமநதி, ராமசாமிபட்டி, மேலப்பாரக்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளாகிய நாங்கள் கடந்த 2017–18–ம் ஆண்டிற்கு பயிர்காப்பீடு செய்திருந்தோம். மழைபொய்த்து போனதால் விவசாயம் இல்லாமல் அடியோடு நாசமானது. இதனால் வாங்கிய கடனை அடைப்பதற்காக பயிர்காப்பீடு இழப்பீட்டு தொகையை எதிர்பார்த்து காத்திருந்தோம்.
இந்நிலையில் பிற விவசாயிகளுக்கு காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில் காவடிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காப்பீடு செய்த எங்களுக்கு மட்டும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை. இதுதொடர்பாக கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை.
கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் அவதிப்பட்டு வரும் எங்களுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்காவிட்டால் கடன் தொகையை கட்ட முடியாமல் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.