வங்கி கணக்கு எண்ணில் பூஜ்ஜியம் விடுபட்டதால் பயிர் இழப்பீட்டு தொகை பெற முடியாமல் தவிக்கும் பெண்கள்


வங்கி கணக்கு எண்ணில் பூஜ்ஜியம் விடுபட்டதால் பயிர் இழப்பீட்டு தொகை பெற முடியாமல் தவிக்கும் பெண்கள்
x
தினத்தந்தி 13 May 2019 11:30 PM GMT (Updated: 13 May 2019 10:01 PM GMT)

கிராம நிர்வாக அதிகாரி வங்கி கணக்கு எண்ணில் பூஜ்ஜியத்தை பதியாமல் விடுபட்டதால் பயிர் இழப்பீட்டு தொகை பெறமுடியாமல் தவிக்கும் பெண்கள் மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மழைபெய்யாமல் வறட்சி ஆகிவிட்டதால் பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2017–18–ம் ஆண்டிற்கான பயிர்காப்பீடு இழப்பீட்டு தொகை பெரும்பாலானோருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் விடுபட்டவர்கள் நாள்தோறும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தெற்கு தெரு பகுதியை சேர்ந்த முகம்மது முத்து பாத்திமா, ஷாஜகான்பீவி ஆகியோர் கண்ணீர் மல்க அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– எங்களின் விவசாயம் வீணாகிபோனதால் பயிர்காப்பீடு செய்து இழப்பீட்டு தொகையை எதிர்பார்த்து காத்திருந்தோம். இந்நிலையில் எங்களின் நிலத்திற்கான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாமல் உள்ளது.

இதற்கான காரணத்தினை விசாரித்தபோது ஏர்வாடி கிராம நிர்வாக அதிகாரி எங்களின் வங்கி கணக்கினை பதிவு செய்யும்போது நடுவில் உள்ள பூஜ்ஜியத்தை விட்டுவிட்டார். 15 இலக்க எண்ணிற்கு பதிலாக 14 இலக்க எண்ணை மட்டும் பதிவு செய்து வங்கி கணக்கின் நடுவில் உள்ள ஒரு பூஜ்ஜியத்தை இருவருக்கும் பதியாமல் விட்டுவிட்டனர்.

இதனால் வங்கி கணக்கின் பதிவு எண்ணில் ஒரு பூஜ்ஜியம் குறைந்து எங்களின் கணக்கில் முறையாக வரவு வைக்க முடியாமல் போய்விட்டது. இதனால் பயிர் இழப்பீட்டு தொகை பெறமுடியாமல் தவித்து வருகிறோம். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் சரியான வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்து எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணத்தினை வழங்கவில்லை.

எனவே, அதிகாரிகளின் தவறால் எங்களுக்கு கிடைக்காமல் போய்உள்ள பயிர் இழப்பீட்டு தொகையை உரிய விசாரணை செய்து வங்கி கணக்கு எண்ணை திருத்தி எங்களுக்கான பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. ஷாஜகான் பீவிக்கு ரூ.47 ஆயிரத்து 763 தொகையும், முகம்மது முத்து பாத்திமாவிற்கு ரூ.9 ஆயிரத்து 825 தொகையும் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் வங்கி கணக்கு முறையாக பதிவு செய்யாததால் பயனாளிகளுக்கு வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story