தனுஷ்கோடியில் பூங்கா, நிழற்குடை அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை


தனுஷ்கோடியில் பூங்கா, நிழற்குடை அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 May 2019 10:45 PM GMT (Updated: 13 May 2019 10:01 PM GMT)

தனுஷ்கோடியில் பூங்கா,நிழற்குடை அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி பகுதி. அதுபோல் புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி வரை 53 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் கடந்த 3 ஆண்டுளுக்கு முன்பு தான் ரூ.50 கோடியில் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து அரிச்சல்முனை கடற்கரை வரையிலும் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக சாலை அமைக்கப்பட்டது.

தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான இந்த புதிய சாலை பிரதமர் நரேந்திரமோடியால் திறந்து வைக்கப்பட்டது.கடலின் நடுவே அமைக்கப்பட்ட தனுஷ்கோடி வரையிலான சாலையை காண கடந்த 1 ஆண்டுக்கு மேலாக இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் கார்,வேன்,பஸ்கள் மூலமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.அதிலும் தற்போது கோடைகால விடுமுறையையொட்டி கடந்த 2 வாரத்திற்கு மேலாக தனுஷ்கோடி பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்டதோடு அதன்பின் தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. தனுஷ்கோடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து கடல் அழகை பார்த்து ரசிக்க நிழற் குடையோ, இருக்கைகளோ, குழந்தைகள் விளையாட்டு பூங்கா, குடிநீர் வசதி என எந்த ஒரு வசதியும் செய்யப்படவில்லை.

இதனால் தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சுற்றுலா வாகனங்கள் நிறுத்த வசதியாக வாகன நிறுத்துமிடம் கூட அமைக்கப்படாததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே தனுஷ்கோடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்கும் வகையில் மற்றும் குழந்தைகள் விளையாடும் வகையில் அனைத்து வசதிகளையும் செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story