தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு; போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு; போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 13 May 2019 10:10 PM GMT (Updated: 13 May 2019 10:10 PM GMT)

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பரவலாக விற்பனை செய்யப்படும் நிலை உள்ளதால் மாவட்ட போலீஸ் நிர்வாகம் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பாக்கு விற்பனை அதிகரித்து வருகிறது. போலீசார் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் சோதனை நடத்தி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததாக வழக்குப்பதிவு செய்கிறார்கள். அருப்புக்கோட்டையில் சில தினங்களுக்கு முன்னர் ஒரு வீட்டில் இருந்து 3,500 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே நபரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதே போன்று சிவகாசியிலும் குறிப்பிட்ட நபரிடம் இருந்து மட்டுமே புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்யும் நிலை தொடர்கிறது. ஆனால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாத்தூரில் இருந்து சிவகாசிக்கு வந்த ஒரு வாகனத்தை சோதனையிட்ட போலீஸ் அதிகாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் ஒரு நபரை மட்டுமே கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். மொத்தமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொள்முதல் செய்யும் அவர் யார்? யாருக்கு வினியோகம் செய்கிறார் என்பதை பற்றி போலீசார் விசாரணை நடத்தாதது ஏன்? என்று தெரியவில்லை.

பரஸ்பரம் ஆதாயம் கருதி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை தடுக்க போலீசார் முறையான நடவடிக்கை எடுக்காதது தொடர்கிறது. இதனால் பாதிப்பு அடைவது பொதுமக்களும், இளைஞர்களும் தான்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதால் மாவட்ட போலீஸ் நிர்வாகம் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி சிறப்பு குழுக்கள் அமைத்து மாவட்டம் முழுவதும் திடீர் ஆய்வு நடத்த வேண்டும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிவகாசி அண்ணாகாய்கறி மார்க்கெட் அருகில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து சிவகாசி டவுன் சப்–இன்ஸ்பெக்டர் சந்திராதேவி மற்றும் போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த கடையில் 108 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.65 ஆயிரம் ஆகும். இதை தொடர்ந்து அந்த கடையில் இருந்த சேர்மன் சண்முகநாடார் ரோட்டை சேர்ந்த பெரியசாமி (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story