சிவகாசி அருகே குடிநீர் பிரச்சினை: காலி குடங்களுடன் திரண்டு பெண்கள் மறியல்
சிவகாசி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகாசி,
திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட சத்யாநகர், கே.கே.நகர், கருணாநிதி காலனி ஆகிய பகுதியில் 1,000–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் வசிப்போருக்கு திருத்தங்கல் நகராட்சி சார்பில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் தங்கள் பகுதியில் இருந்து காலி குடங்களுடன் ஊர்வலமாக சிவகாசி–விருதுநகர் சாலையில் உள்ள குறுக்குபாதை பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். அங்கு சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் சிவகாசியில் இருந்து விருதுநகர் வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அதே போல் விருதுநகர் உள்ளிட்ட மற்ற ஊர்களில் இருந்து சிவகாசியை நோக்கி வந்த வாகனங்கள் நகருக்குள் வரமுடியாத நிலை உருவானது. 30 நிமிடம் நடந்த இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து திருத்தங்கல் நகராட்சி அதிகாரிகள் மற்றும் சிவகாசி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் பல மாதங்களாக குடிநீர் வினியோகம் இல்லை, நகராட்சி அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று குற்றம்சாட்டினர். பின்னர் அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.