பராமரிக்காமல் விடப்பட்ட தாவரவியல் பூங்கா சிறுவர்கள் ரெயில் முடங்கியதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
புதுவை தாவரவியல் பூங்கா முறையாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது. செயற்கை நீரூற்று, சிறுவர்கள் ரெயில் முடங்கிப் போனதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைகின்றனர்.
புதுச்சேரி,
கோடைவிடுமுறையை கொண்டாட புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள சுண்ணாம்பாறு படகு குழாம், தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்க தவறுவதில்லை.
புதுவை தாவரவியல் பூங்கா பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது. அதாவது கடந்த 1826–ம் ஆண்டு நகரின் மையப்பகுதியில் 22 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது. 28 பிளாட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ள இங்கு ஜப்பானிய தோட்டம், கிளாஸ் அவுஸ், மீன் காட்சியகம் போன்றவை மக்கள் ரசித்து பார்க்கக் கூடியவை ஆகும். இந்த பூங்காவில் 1,500 வகையான செடிகள், மரங்கள் உள்ளன.
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு செல்லாமல் போவதில்லை. அந்த அளவுக்கு இது பொதுமக்களால் விரும்பக்கூடியதாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் இங்கு நுழைவு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாமல் இருந்தது.
ஆனால் தற்போது தாவரவியல் பூங்காவை சீரமைப்பதற்காக நுழைவுக்கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.20, வெளிநாட்டவருக்கு ரூ.50 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படாமல் தற்போது மிக மோசமாக உள்ளது. சிறுவர்கள் ரெயில் பழுது ஏற்பட்டு கடந்த பல மாதங்களாக முடங்கிப்போய் உள்ளது. இதனால் இங்கு வரும் சிறுவர்களும், பெற்றோர்களும் ஏமாற்றமடைகின்றனர். கோடைக்காலம் என்பதால் மரத்தின் இலைகள் உதிர்ந்துபோய் உள்ளன. அவை அள்ளப்படாததால் இலை, தழைகள் குப்பை கூளமாக கிடக்கிறது. செயற்கை நீரூற்று செயல்படாமலேயே உள்ளது. அதன்முன்பு உள்ள குளம்போன்ற அமைப்பில் இலை தழைகள் தேங்கி அழுகி துர்நாற்றம் வீசுகிறது.
அதேபோல் இங்கு அமைக்கப்பட்டுள்ள இசை நடன நீரூற்று செயல்படாமல் வெறும் காட்சிப்பொருளாக இருந்து வருகிறது. போதாக்குறைக்கு இலவசம் பஞ்சு மரத்தில் உள்ள காய்கள் வெடித்து பஞ்சுகள் பறக்கின்றன. இவை அங்குள்ள செடிகள் மற்றும் தரையின் மீது படர்ந்து காணப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது.
கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தற்போது புதுவைக்கு வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் தாவரவியல் பூங்காவை சீரமைப்பதுடன் சிறுவர்கள் ரெயிலை மீண்டும் இயக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் ஆகும்.