ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது; மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி,
மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு புதுவை மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜன், இணை பொதுச்செயலாளர் முருகேசன், பொருளாளர் தாமோ.தமிழரசன், செயலாளர்கள் அரிகிருஷ்ணன், நிர்மலா சுந்தரமூர்த்தி, நேரு, ராம.அய்யப்பன், சந்திரமோகன், பிராங்கிளின் பிரான்சுவா, ஆனந்த், ஜெயலட்சுமி, மலர்விழி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
*பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பூமிக்கடியில் இருக்கும் ஹைட்ரோ கார்பனை எடுத்து பயன்படுத்தி மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகம்–புதுச்சேரியில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனுமதியும் வழங்கியுள்ளது. இதற்கான கிணறுகள் ஆயிரம் மீட்டருக்கு மேல்தான் தோண்டப்படும். அப்போது பூமிக்கடியில் இருக்கும் நீர் வெளியேற்றப்படும். இந்த செயல்களால் நிலத்தடி நீர் தற்போதுள்ள ஆழத்தைவிட கூடுதல் ஆழத்துக்கு சென்றுவிடும்.
புதுச்சேரி முற்றிலும் நிலத்தடி நீரைத்தான் நம்பி உள்ளது. இதனால் விவசாயம் முற்றிலும் அழிந்து, மக்களுக்கு குடிப்பதற்கே நீர் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தால் புதுவை விரைவில் பாலைவனமாகவும், சுடுகாடாகவும் நிச்சயம் மாறிவிடும். எனவே இந்த திட்டத்தை எதிர்ப்பது, இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை தடுக்க தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுப்பது.
*நீதிமன்றங்கள் மூலம் அதிகாரத்தை பெற்றுள்ள புதுச்சேரி அரசு அதை முழுமையாக பயன்படுத்தி சார்பு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் சம்பளமின்றி அவதிக்குள்ளாகியிருக்கும் 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு உடனடியாக அவர்களது நிலுவை சம்பளம் முழுவதையும் வழங்கவேண்டும்.
*தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் பெறவும் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியின் நிர்வாக செலவுகளை கணக்கிட்டு வைப்புத்தொகை உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களையும் சேர்த்து ரூ.25 லட்சம் கட்டணம் நிர்ணயித்து உள்ளதையே தனியார் மருத்துவ கல்லூரிகளின் கட்டணமாக நிர்ணயிக்கவும் அரசை வலியுறுத்துவது.
*புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த மருத்துவ படிப்புக்கு காங்கிரஸ் அரசு ரூ.2.25 லட்சம் கட்டணமாக நிர்ணயித்துள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன் இலவச மருத்துவ படிப்பு தொடர அரசை வலியுறுத்துவது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.