கொடைரோடு அருகே துணிகரம், தலைமை ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கொடைரோடு அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொடைரோடு,
கொடைரோடு அருகேயுள்ள அம்மாப்பட்டியை சேர்ந்தவர் பீட்டர் (வயது 54). இவர் அம்மாப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி ஜுலியட் ஜெபமணி. அம்மையநாயக்கனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியையாக உள்ளார்.
இந்தநிலையில் விடுமுறையையொட்டி பீட்டர் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்கள் நேற்று காலை ஊருக்கு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 2½ பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் பீட்டர் புகார் செய்தார்.
அதன்பேரில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பூட்டை உடைத்து தங்களது கைவரிசையை காட்டியது தெரியவந்தது.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து கொண்டனர் மேலும் திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் ரிண்டா வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து கொடைரோடு செல்லும் சாலையில் ஒரு கி.மீ., தூரம் ஓடி போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடந்த 2013-ம் ஆண்டு பீட்டர் மனைவி ஜுலியட் ஜெபமணி வீட்டில் தனியாக இருந்தபோது, மர்மநபர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றார். இதையடுத்து ஜுலியட் ஜெபமணி கூச்சல் போட்டதால் அக்கம்பக்கத்தினர் திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தற்போது மீண்டும் மர்மநபர்கள் புகுந்து கைவரிசையை காட்டியிருப்பது அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story