ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில், மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் கலெக்டர் ஆய்வு


ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில், மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 14 May 2019 3:45 AM IST (Updated: 14 May 2019 4:54 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் பாலசமுத்திரம் வாக்குச்சாவடியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு நடத்தினார்.

ஆண்டிப்பட்டி,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. இந்நிலையில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குகளை அழிக்காமல் அப்படியே வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் வாக்குப்பதிவு நாளின் போது பிரச்சினை ஏற்பட்டது. அதையொட்டி அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தினார்கள். மேலும் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் ‘சீல்’ வைக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டது.

இந்நிலையில் பாலசமுத்திரம் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பாலசமுத்திரம் 67-ம் எண் வாக்குச்சாவடியில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நேற்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் மற்றும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர். பின்னர் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் பேசிய கலெக்டர் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து கலெக்டர் பல்லவி பல்தேவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடுகபட்டி வாக்குச்சாவடியிலும், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து அந்த வாக்குச்சாவடிகளில் போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற 19-ந்தேதி 100 சதவீதம் வாக்குப்பதிவை அமைதியாக நடத்தி முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 
1 More update

Next Story