வேலூர் மத்தியசிறையில், போதைப்பொருள் கடத்தல் கைதியிடம் செல்போன் பறிமுதல்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதியிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்,
வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மும்பையை சேர்ந்த சுபாஷ் என்ற மணிவண்ணன் (வயது 53) என்பவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் தண்டனை பெற்று சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் சிறை அலுவலர்கள் கைதிகளின் அறைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மணிவண்ணனின் அறையில் இருந்து செல்போன் ஒன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர் சிறைக்குள் இருந்துகொண்டே வெளியில் உள்ள நபர்களிடம் செல்போனில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறைக்குள் இருக்கும் போதைப்பொருள் கடத்தல் கைதிக்கு செல்போன் சென்றது எப்படி, சிறை ஊழியர்கள் யாருக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா?, மணிவண்ணன் யார், யாருடன் பேசி உள்ளார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story