மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில், பூட்டிய வீட்டுக்குள், 2½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் - நள்ளிரவில் அப்புறப்படுத்த முயன்ற மர்ம நபர்கள் + "||" + In Thiruvannamalai, 2½ tons of plastic materials into locked home

திருவண்ணாமலையில், பூட்டிய வீட்டுக்குள், 2½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் - நள்ளிரவில் அப்புறப்படுத்த முயன்ற மர்ம நபர்கள்

திருவண்ணாமலையில், பூட்டிய வீட்டுக்குள், 2½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் - நள்ளிரவில் அப்புறப்படுத்த முயன்ற மர்ம நபர்கள்
திருவண்ணாமலையில் பூட்டிய வீட்டுக்குள் 2½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது. நள்ளிரவில் பின்பக்க கதவை திறந்து மர்மநபர்கள் அப்புறப்படுத்த முயன்றனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கந்தசாமிக்கு புகார்கள் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுரேந்திரன் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் ஆல்பர்ட், எஸ்.வினோத்கண்ணா, கார்த்திகேயன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதிக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர்.அப்போது அந்த குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது. சுமார் 540 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த குடோன் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து திருவண்ணாமலை காயிதேமில்லத் 2-வது தெருவில் ஒரு வீட்டை குடோனாக பயன்படுத்தி பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அந்த வீட்டுக்கு சென்றனர். ஆனால் அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. உரிமையாளர் வெளியூர் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள், போலீசாரின் முன்னிலையில் அந்த வீட்டுக்கு வேறு ஒரு பூட்டு போட்டிருந்தனர். இதையடுத்து அதிகாரிகள் சென்று விட்டனர். இரவில் அந்த வீட்டின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் மர்மநபர்கள் நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டின் பின்பக்க கதவை திறந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களை ரகசியமாக அப்புறப்படுத்த முயன்றனர். நாய்கள் குரைத்ததால் சந்தேகமடைந்த போலீசார் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தனர். அப்போது அங்கு மர்மநபர்கள் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர்.

போலீசாரை பார்த்ததும் அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தும் மர்மநபர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை அதிகாரிகள் அந்த வீட்டுக்கு வந்து கதவை திறந்து பார்த்தனர். அந்த வீட்டை பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைக்க குடோனாக பயன்படுத்தியதும், வீட்டினுள் 2½ டன் பிளாஸ்டிக் பொரு ட்கள் இருந்ததும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. பின்னர் அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் வீட்டின் உரிமையாளர் முகமதுஆசிப் என்பது தெரியவந்தது. அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை