விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், போலீசில் புகார்


விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், போலீசில் புகார்
x
தினத்தந்தி 14 May 2019 10:30 PM GMT (Updated: 14 May 2019 6:47 PM GMT)

செம்பனார்கோவில் அருகே விளை நிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், போலீசில் புகார் செய்துள்ளனர்.

பொறையாறு,

நாகை மாவட்டம், சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் இருந்து நாங்கூர், காத்திருப்பு, தலச்சங்காடு, காளகஸ்திநாதபுரம் வழியாக மேமாத்தூர் வரை 29 கி.மீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம் சார்பில் விளைநிலங்களில் எரிவாயு கொண்டு செல்லும் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி செம்பனார்கோவில் அருகே காளகஸ்திநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட உமையாள்புரம் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கிராமத்தில் நிலத்தடி நீரை பயன்படுத்தி தற்போது கோடை சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகள், பம்புசெட் மூலம் நிலத்தடிநீரை இரைத்து விளைநிலங்களை உழும் பணியை மேற்கொண்டனர். தற்போது விளைநிலங்களில் நாற்றங்கால் வளர்ந்து நடவு செய்யும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் கெயில் நிறுவனத்தினர் மேற்கண்ட கிராமத்தில் ராட்சத குழாய்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புகார்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதில், காரைக்காலை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கெயில் நிறுவனம் விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல் முன்னறிவிப்பு இன்றி விளைநிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியால் கோடை விவசாயத்திற்கு தயார் செய்யப்பட்டுள்ள நாற்றங்கால் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

ஹைட்ரோ கார்பன், ஷேல் மீத்தேன் எடுப்பதற்காகவே விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதனால் விளைநிலங்கள் கண்டிப்பாக பாழாகும். எனவே, விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியை உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே நிலம், நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் மற்றும் இயக்கத்தினர், விளைநிலங்களில் குழாய்கள் பதிக்கும் பணியை பார்வையிட்டு, அதனை உடனே நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Next Story