உத்தமபாளையத்தில், கூட்டுறவு வங்கி அதிகாரி வீட்டில் திருட்டு


உத்தமபாளையத்தில், கூட்டுறவு வங்கி அதிகாரி வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 14 May 2019 11:00 PM GMT (Updated: 14 May 2019 6:56 PM GMT)

உத்தமபாளையத்தில் கூட்டுறவு வங்கி அதிகாரி வீட்டில் டி.வி., வெள்ளி பொருட்களை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் ஒருங்கிணைந்த கோர்ட்டு அருகே வசித்து வருபவர் முத்தையா (வயது 64). இவர், கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 9-ந்தேதியன்று இவர், தனது குடும்பத்தினருடன் கோவைக்கு சென்றார். பின்னர் நேற்று அதிகாலை வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் கதவு கம்பியால் நெம்பி உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வரவேற்பு அறையில் இருந்த எல்.இ.டி. டி.வி., பிரோவில் இருந்த வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் என்று கருதப்படுகிறது.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு வீரபாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். வீட்டில் பதிவான ரேகைகளை அவர்கள் பதிவு செய்தனர்.

இந்த திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். உத்தமபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்திருட்டு சம்பவம் அரங்கேறி வருகிறது. போலீசாருக்கு சவால் விடும் வகையில் திருட்டுகளில் ஈடுபடுவோரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

குறிப்பாக சுருளி அருவியில் உள்ள பூதநாராயணன் கோவிலில் உண்டியல் திருட முயன்றதை தடுத்த பூசாரி வெட்டிக்கொல்லப்பட்டார். இதில் தொடர்புடையவர்களை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. அணைப்பட்டி பாண்டி முனீஸ்வரன்கோவில் உண்டியலை திருடிய வழக்கில் தப்பி ஓடிய ஒருவரை போலீசார் பிடிக்கவில்லை.

ராயப்பன்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் வீட்டுக்குள் புகுந்து நகை திருடிய மர்ம நபர் போலீசாரிடம் சிக்கவில்லை. இதுபோன்ற தொடர் திருட்டு சம்பவங்களினால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே உத்தமபாளையம் பகுதியில் தொடர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறும்போது, இடைத்தேர்தல் மற்றும் வீரபாண்டி கோவில் திருவிழா பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதால் ரோந்து பணி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருட்டுகளில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகிறோம். வெளியூர் செல்லும் பொதுமக்கள் அருகே உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். 

Next Story