அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கமல்ஹாசன் மீது வழக்கு


அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கமல்ஹாசன் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 May 2019 11:15 PM GMT (Updated: 14 May 2019 7:28 PM GMT)

அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரவக்குறிச்சி,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கடந்த 12-ந் தேதி இரவு பிரசாரம் செய்தார். அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டி அண்ணாநகர் சந்திப்பில் அவர் பிரசாரம் செய்து பேசுகையில், ‘அந்த காலத்தில் வெள்ளையனே வெளியேறு என்று போராடினோம். தற்போது கொள்ளையனே வெளியேறு என போராட வேண்டிய சூழல் வந்து விட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர்தான் நாதூராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க நான் வந்திருக்கிறேன் என நினைத்து கொள்ளுங்கள்” என்றார்.

கமல்ஹாசனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தீவிரவாதத்தையும், இந்து மதத்தையும் தொடர்புப்படுத்தி கமல்ஹாசன் கூறிய இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்து மதத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேச்சு இருந்ததாக கூறி கமல்ஹாசனுக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சில அரசியல் கட்சியினர் அவருக்கு ஆதரவும் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் கரூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.வி.ராமகிருஷ்ணன் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் நேற்று மாலை கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், கமல்ஹாசனின் பிரசார பேச்சு இந்துக்களிடம் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளப்பட்டி பகுதியானது முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாக இருப்பதால், அவர்களின் ஓட்டுகளை அவர் கட்சிக்கு பெறுவதற்காக அவ்வாறு பேசியுள்ளார். இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த இந்துக்களை அவதூறாகவும், தீவிரவாதி என்றும் சித்தரித்து பேசினார். அவரது பேச்சு இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பகை உணர்வை ஏற்படுத்துவதாகவும் தூண்டுவதாகவும் இருந்தது. எனவே, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டிருந்தது.

புகாரின் பேரில், அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமேனி, இ.பி.கோ சட்டப்பிரிவு 295 (ஏ) (இந்துக்களை இழிவுப்படுத்துதல்), மற்றும் 153 (ஏ) (பொது இடத்தில் மதகலவரத்தை தூண்டுவதுபோல் பேசுதல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்தார்.

இதுதொடர்பாக கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வி.விக்ரமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக பேசிய மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மற்றும் மதம், இனம், மொழி, சாதி சம்பந்தமாக வன்முறையை தூண்டும் விதமாக பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Next Story