அரசு பஸ் கண்டக்டர் கொலை வழக்கில் ஆட்டோ டிரைவரின் மனைவி உள்பட 2 பேர் கைது


அரசு பஸ் கண்டக்டர் கொலை வழக்கில் ஆட்டோ டிரைவரின் மனைவி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 May 2019 11:00 PM GMT (Updated: 14 May 2019 7:41 PM GMT)

அரசு பஸ் கண்டக்டர் கொலை வழக்கில் ஆட்டோ டிரைவரின் மனைவி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இலைக் கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல்(வயது 42). அரசு பஸ் கண்டக்டர். இவர் விருத்தாசலம் அருகே புதுக்குப்பம் பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மனைவி இறந்த பின்னர் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஏழுமலையின் மகள் ஆனந்தவள்ளிக்கும்(32), குமரவேலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் குமரவேலும், ஆனந்தவள்ளியும் இலைக்கடம்பூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆனந்தவள்ளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு விருத்தாசலம் போலீசார் விருத்தாசலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது ஆட்டோவில் ரத்தக்கறை இருந்தால் ஆட்டோ டிரைவர் ஏழுமலையை(63) பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஏழுமலை குமரவேலை கழுத்தை அறுத்து கொலை செய்து தனது ஆட்டோவில் உடலை ஏற்றி செந்துறை அருகே உள்ள பெரியாகுறிச்சி சிமெண்டு சுரங்கத்திற்கு எதிரே போட்டுவிட்டு ஊருக்கு திரும்பி வருவதாக தெரிவித்தார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் செந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கொலை செய்த ஆட்டோ டிரைவர் ஏழுமலையை கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதன் விவரம் வருமாறு:-

முதல் கட்ட விசாரணையில், தான் மட்டுமே கொலை செய்ததாக கூறி வந்த ஏழுமலை, அதன் பின்னர் தனது மகள் திருமணமாவதற்கு முன்பே வேலைக்கு பஸ்சில் செல்லும்போது ஆனந்தவள்ளிக்கும், குமரவேலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருந்தது. இதனை அறிந்த நான் மற்றும் எனது குடும்பத்தினர் அவரை மின்வாரிய ஊழியர் சண்முகத்திற்கு(52) 2-வதாக திருமணம் செய்து வைத்தோம். ஆனால் அதன் பிறகும் எனது மகளுடன் தொடர்பை குமரவேல் விடவில்லை. இதனால் எனது மருமகன் எனது மகளை ஒதுக்கி வைத்து இருந்தார். இந்த நிலையில் எனது மகள் குமரவேலின் சொந்த ஊரான இலைக்கடம்பூரில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் எனது மகளின் வாழ்க்கையை சீரழித்த குமரவேலை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆனந்தவள்ளி இறந்த பின்னர் குமரவேல் அதிக அளவில் மது பழக்கத்திற்கு ஆளாகியிருந்தார். இதனை சாதகமாக பயன்படுத்தி சில மாதங்களுக்கு முன்பு திட்டக்குடியிலேயே மது வாங்கி கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்தேன். ஆனால் அப்போது தப்பி விட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று குமரவேலிடம் நைசாக பேசி மது குடிக்கலாம் வா என்று அழைத்து சென்று சிறிது மது வாங்கி கொடுத்தேன். பின்னர் மீண்டும் மது குடிக்கலாம் வீட்டிற்கு வா என்று கூறி 2 மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு குமரவேலை வீட்டுக்கு அழைத்து சென்றேன். வீட்டில் வைத்து மதுவில் விஷம் கலந்து கொடுத்து குமரவேலை மிரட்டி, அவரிடம் தான் தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வாங்கிக்கொண்டோம். ஆனால் அவன் பிழைத்து கொண்டால் என்ன செய்வது என்ற ஆத்திரத்தில் நான், எனது மனைவி வசந்தி(60) மற்றும் மருமகன் சண்முகம் ஆகிய மூவரும் அவரை கடுமையாக உருட்டு கட்டையால் தாக்கினோம். இருப்பினும் இறந்ததை உறுதி செய்ய கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தோம். அவனது உடலை எனது மகள் இறந்த அவரது சொந்த ஊரான இலைக்கடம்பூர் பகுதியில் வீசிவிட்டு வந்து விடுவோம் என்று ஆட்டோவில் ஏற்றி கொண்டு வந்து போட்டுவிட்டு வந்து விட்டோம். வீட்டில் இருந்த ரத்தக்கறையை எனது மனைவி சுத்தம் செய்தார்.

இந்த கொலை வழக்கில் நான் மட்டுமே தண்டனை பெறலாம் என்று எண்ணி முதல்கட்ட விசாரணையில் பொய் கூறினேன். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இதனை ஒப்புக்கொண்டேன் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஏழுமலை அவரது மனைவி வசந்தி, அவரது மருமகன் சண்முகம் ஆகிய மூவரையும் செந்துறை போலீசார் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை சம்பவம் நடந்த பகுதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என்பதால் இந்த வழக்கினை விருத்தாசலத்திற்கு மாற்ற செந்துறை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மகளின் வாழ்க்கையை சீரழித்த பஸ் கண்டக்டரை திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அரியலூர், கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story