மாவட்ட செய்திகள்

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதில் சிக்கல்:சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன + "||" + lakes were dry

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதில் சிக்கல்:சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதில் சிக்கல்:சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு போய் மேய்ச்சல் நிலம்போல் காட்சி அளிக்கிறது. எனவே தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை,

பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடியவை ஆகும். சென்னையில் பருவமழை பொய்ப்பு, வெப்பத்தாக்கம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் அந்த ஏரிகள் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளன.

சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் முற்றிலும் வறண்டுபோய் விட்டன. மேய்ச்சல் நிலம் போன்று காட்சி அளிக்கின்றன. ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் ஏரிகளில் தஞ்சம் அடைந்துள்ளன. 3 ஆயிரத்து 234 மொத்த மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 158 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு உடைய புழல் ஏரியில் 63 மில்லியன் கன அடியும் மட்டுமே தண்ணீர் உள்ளது.

பூண்டி ஏரியின் கரையோரங்களில் தண்ணீர் இன்றி இருப்பதால், அங்கு வளர்ந்த புற்களை மாடுகள் மேய்வதை காணமுடிகிறது. மேலும் இருக்கும் குறைந்த அளவு நீரில் ஆங்காங்கே மணல் திட்டுகளும் காணப்படுகிறது.

காலிகுடங்களுடன் பரிதவிப்பு

வெயிலின் தாக்கத்தால் ஏற்கனவே சென்னை நகரில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. அன்றாடம் பெண்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக பரிதவிக்கும் நிலை காணப்படுகிறது. கொளுத்தும் வெயிலில் தண்ணீரை தேடி பலர் அலைவதையும் காண முடிகிறது.

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், விவசாய கிணறுகள், கல்குவாரிகள் போன்ற இடங்களில் இருந்து குடிநீர் வாரியம் சார்பில் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஏரிகள் கைவிட்டுள்ளதால், சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வருண பகவான் கருணை காட்டினால் மட்டுமே வரும் நாட்களில் சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை இருக்கிறது.

இந்த நிலை குறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டை விட குறைவு

சென்னைக்கு ஏரிகளில் இருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் அதிக அளவில் குறைந்துள்ளது. சில ஏரிகளில் நீர் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வழக்கத்தை விட குறைந்த அளவே நீர் ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டை விட வெப்பத்தின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் கடந்த ஆண்டு 3 ஆயிரத்து 222 மில்லியன் கன அடி கொள்ளளவு இருந்தது. ஆனால் தற்போது 228 மில்லியன் கன அடி கொள்ளளவு தான் ஏரிகளில் நீர் இருக்கிறது.

மாதம் இறுதி வரை...

பூண்டி, புழல் உள்ளிட்ட ஏரிகளில் இருக்கும் தண்ணீர் அளவு கடந்த ஆண்டை விட மிக அதிகமாக குறைந்துள்ளது. தற்போது பூண்டி ஏரியில் இருக்கும் நீர் அளவை வைத்து இந்த மாதம் இறுதி வரை சென்னைக்கு தேவையான குடிநீரை வழங்க முடியும். அதன்பின் மழை பெய்தால் மட்டுமே ஏரிகளின் நீர் மட்டம் உயரும். தற்போது உள்ள நிலையில் வீராணம் ஏரியில் தண்ணீர் முழு கொள்ளளவில் உள்ளது. அதன் மூலம் சென்னைக்கு குடிநீர் வர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை