திருச்சி கிராப்பட்டி-எடமலைப்பட்டிபுதூர் இடையே குப்பையை தீயிட்டு கொளுத்துவதால் பலமிழக்கும் பாலம்


திருச்சி கிராப்பட்டி-எடமலைப்பட்டிபுதூர் இடையே குப்பையை தீயிட்டு கொளுத்துவதால் பலமிழக்கும் பாலம்
x
தினத்தந்தி 14 May 2019 10:30 PM GMT (Updated: 14 May 2019 9:18 PM GMT)

திருச்சியில் இருந்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு அனைத்து பஸ்கள், கனரக வாகனங்களும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கிராப்பட்டி-எடமலைப்பட்டிபுதூர் ரெயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது.

திருச்சி,

திருச்சியில் இருந்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு அனைத்து பஸ்கள், கனரக வாகனங்களும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கிராப்பட்டி-எடமலைப்பட்டிபுதூர் ரெயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. திருச்சி ஜங்சனில் இருந்து புதுக்கோட்டை வழியாக செல்லும் ரெயில்கள் இடைப்பட்ட வழியில் சென்றதால் அடிக்கடி கேட் மூடப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்தநிலையில், கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் கிராப்பட்டி-எடமலைப்பட்டிபுதூர் இடையே ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்கியது. பாலப்பணிக்காக அப்போது ரெயில்வே நிர்வாகம் தரப்பில் ரூ.9 கோடியே 50 லட்சமும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.31 கோடியே 43 லட்சம் ஒதுக்கப்பட்டது. ரெயில்வே நிர்வாகம் தரப்பில் 25 மீட்டர் தொலைவுக்கு தண்டவாளத்தின்மேல் பகுதியில் பாலம் அமைக்கவும், 6 மீட்டர் அகலத்துக்கும், 3 மீட்டர் உயரத்திற்கும் இருசக்கர வாகனம், ஆட்டோ செல்லும் வகையில் சுரங்கப்பாதையும் ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டது. எஞ்சிய பாலப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டது.

சிரமங்களை சந்தித்த மக்கள்

இந்த பணி நடந்தபோது, இந்த வழித்தடத்தில் சென்று வந்த பஸ்கள் உள்ளிட்ட இதர வாகனங்கள் மன்னார்புரம் நான்கு வழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. பாலம் கட்டும் பணியின்போது கிராப்பட்டி-எடமலைப்பட்டிபுதூர் இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. பாலப்பணிகளால் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வினியோகம் என்பது வாரக்கணக்கில் தடைப்பட்ட காலமும் இருந்தது. இதனால், அப்பகுதி மக்கள் பல இன்னல்களை சந்திக்கவும் நேரிட்டது. இருப்பினும் பாலப்பணிகள் முடிந்து விட்டால் நிம்மதி என பொறுத்து கொண்டிருந்தனர்.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பணி மேற்கொள்ளப்பட்டு 2013-ல் ஒருவழியாக பணி முடிந்தது. ஆனாலும், இன்னமும் பாலம் பராமரிப்பு என்பது அறவே இல்லாமல் போனதுதான் வேதனை. கட்டிய மேம்பாலத்திற்கு இதுவரை வர்ணம் அடிக்கப்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மேம்பாலத்தின் தடுப்புச்சுவரின் மீது தடுப்பு கம்பிகள் பதிக்கப்பட்டன. மழை பெய்தால் தண்ணீர் சீராக வெளியேறும் வகையில் பிளாஸ்டிக் குழாய்களும் பொருத்தப்பட்டன.

தீ வைத்து கொளுத்தும் அவலம்

வாரத்தில் ஒருநாள் செவ்வாய்க்கிழமைதோறும் கிராப்பட்டி பகுதி அணுகுசாலையில் வாரச்சந்தை நடக்கிறது. அதுபோல எடமலைப்பட்டி புதூரில் இறங்கும் பாலத்தின் அணுகுசாலையில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. சந்தை முடிந்து இரவு 10 மணிக்கு மேல் கடையை காலி செய்து விட்டு செல்லும் வியாபாரிகள் குப்பைகளை பாலத்தின் அடியில் குவித்து விட்டு செல்கிறார்கள். மேலும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களும் தள்ளு வண்டிகள் மூலம் வீதிகளில் சேகரித்து வரும் குப்பைகளையும் பாலத்திற்கு கீழ் அடிப்பகுதியில் குவித்து செல்கிறார்கள். இப்படி குவிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி லாரிகள் முறையாக அள்ளிச்செல்வதில்லை. மாறாக, குப்பையில் தீ வைத்து கொளுத்தி செல்லும் அவலம் நிகழ்கிறது. இதனால், கோடிக்கணக்கில் செலவழித்து போக்குவரத்து மற்றும் மக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட மேம்பாலம் விரைவில் பலமிழந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் ராட்சத தூண்கள், கட்டிடங்கள் கரும்புகை படிந்து அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. மழைநீர் செல்ல பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் தீயில் கருகி உருக்குலைந்தும் உள்ளது.

மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல இடங்களில் மேம்பாலங்களுக்கு கீழ் உள்ள இடங்களில் பூங்கா அமைத்தோ அல்லது உள்ளே யாரும் செல்லாத வகையில் வலை அடித்து பராமரிக்கும் நெடுஞ்சாலைத்துறை அப்படியே விட்டு சென்று விட்டது.

எதிர்பார்ப்பு

மேம்பாலங்களில் கீழ் பல இடங்களில் பூங்கா அமைத்து பராமரிக்கும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம், கிராப்பட்டி-எடமலைப்பட்டிபுதூர் மேம்பாலத்தின்கீழ் மட்டும் குப்பைகளை கொட்டி அதை எரிக்கும் செயலை செய்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.

எனவே, கோடிக்கணக்கில் செலவழித்து கட்டிய மேம்பாலத்தை பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். 

Next Story