மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக புகார் தெரிவிக்க அவசர கட்டுப்பாட்டு அறை கலெக்டர் தகவல்


மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக புகார் தெரிவிக்க அவசர கட்டுப்பாட்டு அறை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 14 May 2019 10:45 PM GMT (Updated: 14 May 2019 9:25 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக புகார் தெரிவிக்க அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் சிவராசு தெரிவித்து உள்ளார்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் கோடைகாலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் போதிய அளவு குடிநீர் கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி மாநகராட்சி ஆணையர், குடிநீர் வடிகால் வாரியத்தின் செயற்பொறியாளர், உதவி இயக்குனர்கள்(பஞ்சாயத்து, பேரூராட்சி) மற்றும் நகராட்சி ஆணையர்கள் ஆகிய அலுவலர்களால் தினசரி குடிநீர் வினியோகம் கண்காணிக்கப்பட்டு முறையாக பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

முறையின்றி சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் எடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மின்மோட்டார் பழுது ஏற்பட்டாலோ அல்லது குடிநீர் குழாய் பழுது ஏற்பட்டாலோ உடனே சரிசெய்யப்பட்டு, குடிநீர் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவையான இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது. தேவை ஏற்பட்டால் லாரிகள் மூலமும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக புகாரோ அல்லது ஆலோசனையோ தெரிவிக்க மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அவசர கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 அல்லது 0431-2418995 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story