பவானிசாகர் அணையில் மீனவர்கள் சென்ற ஜீப்பை ஒற்றை யானை துரத்தியது
பவானிசாகர் அணையில் மீனவர்கள் சென்ற ஜீப்பை ஒற்றை யானை துரத்தியது.
புஞ்சைபுளியம்பட்டி,
பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. யானைகளுக்கு ஏற்ற தட்ப வெட்ப நிலை இங்கு நிலவுவதால் ஆண்டுதோறும் பவானிசாகர் வனப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் மழை பெய்யவில்லை. அதனால் வனப்பகுதி முழுவதும் காய்ந்து கிடக்கிறது.
காட்டாறுகள் வறண்டு காணப்படுகின்றன. வனக்குட்டைகள் வற்றிவிட்டன. இதனால் யானைகள் தண்ணீரை தேடி தினமும் மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை கூட்டமாகவும், தனியாகவும் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் குடிக்க வருகின்றன.
பவானிசாகர் அணையை ஒட்டியுள்ள அரசுக்கு சொந்தமான பழத்தோட்டம் என்ற இடத்தின் வழியாக யானைகள் அணையின் மேல் பகுதிக்கு செல்கின்றன. சில நேரங்களில் சுற்றுலா பயணிகளும், மீன்பிடிக்க செல்பவர்களும் இந்த வழியை பயன்படுத்துகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று காலை பவானிசாகர் அணையில் மீன்பிடிக்க மீனவர்கள் சிலர் ஒரு ஜீப்பில் சென்றுகொண்டு இருந்தார்கள். அணையின் மேல்பகுதிக்கு அவர்கள் செல்ல முயன்றபோது திடீரென எதிரே ஒரு ஒற்றை ஆண் யானை வந்தது.
யானையை பார்த்ததும் பயந்துபோய் உடனே ஜீப்பை நிறுத்திவிட்டார்கள். ஆனால் யானை திடீரென ஜீப்பை நோக்கி ஓடிவந்தது. இதனால் அலறியபடி ஜீப்பை பின்னோக்கியே ஓட்டிக்கொண்டு வந்தார்கள். சிறிது தூரம் துரத்திய யானை பின்னர் ஒரு புதருக்குள் சென்றுவிட்டது.
அதன்பின்னரே ஜீப்பில் சென்றவர்கள் நிம்மதி அடைந்தார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.