இயற்கை பேரிடரை முன்கூட்டியே தெரிந்து கொள்ள செயலி அறிமுகம் ஈரோடு கலெக்டர் தகவல்
இயற்கை பேரிடரை முன்கூட்டியே தெரிந்துகொள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் இயற்கை பேரிடர் காலங்களில் பேரிடர் தொடர்பான அறிக்கைகள், வானிலை அறிக்கை, மழை அளவு போன்ற விவரங்களை தெரிந்துகொள்வதற்கு வசதியாக ‘TNSMART’ என்ற செல்போன் செயலி தொடங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறையால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்த செயலியை பொதுமக்கள் தங்களது ஸ்மார்ட் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதன்மூலம் சுனாமி, பூகம்பம், வெள்ளம், அதிக வெப்பம், புயல் போன்றவற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த குறுஞ்செய்தி, செயலியில் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால் இயற்கை பேரிடரை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.
எனவே இந்த செயலியை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், மாணவ–மாணவிகள், தொண்டு நிறுவனங்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அந்த செயலியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் இயற்கை பேரிடர் பாதிப்புகளை செல்போனில் இருந்து புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்யலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.