அரூர் அருகே புது கொக்கராப்பட்டியில் குடிநீருக்காக காலிக்குடங்களுடன் காத்து கிடக்கும் பொதுமக்கள்


அரூர் அருகே புது கொக்கராப்பட்டியில் குடிநீருக்காக காலிக்குடங்களுடன் காத்து கிடக்கும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 15 May 2019 4:30 AM IST (Updated: 15 May 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

அரூர் அருகே புது கொக்கராப்பட்டியில் குடிநீருக்காக பலமணி நேரம் பொதுமக்கள் காத்து கிடக்கிறார்கள்.

அரூர்,

தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் கடுமையான வறட்சி ஏற்பட்டு உள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏரிகள் முழுமையாக வறண்டு உள்ளன. நகர்ப்புற பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் பல மீட்டர் ஆழத்திற்கு சென்று விட்டதால் பெரும்பாலான ஊர்களில் பல ஆயிரக்கணக்கான வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் (போர்வெல்) 95 சதவீதத்திற்கும் மேற்பட்டவை தண்ணீரின்றி வறண்டு விட்டன.

இதன்காரணமாக குடிநீரை மட்டுமின்றி வீட்டு உபயோகத்திற்கான தண்ணீரையும் விலைக்கு வாங்கும் நிலைக்கு பெரும்பாலான பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்துள்ளது. இருந்தபோதிலும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் அளவிற்கு மழைப்பொழிவு இல்லை.

அரூர் ஒன்றியம் கொக்கராப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புது கொக்கராப்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 10 நாட்களுக்கு ஒரு முறை குறைந்த அளவில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த கிராம மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். ஒகேனக்கல் குடிநீர் வினியோகிக்கப்படும் குழாய்கள் அமைந்துள்ள பகுதியில் காலிக்குடங்களுடன் பெண்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், குடிநீர் கிடைப்பதற்கான மாற்று நீராதாரங்கள் எங்கள் பகுதியில் இல்லாததால் நீண்ட தூரம் சென்று தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். குடிநீர் பற்றாக்குறையால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். எனவே எங்களுக்கு ஒகேனக்கல் குடிநீரை 2 நாட்களுக்கு ஒரு முறையாவது வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Next Story