தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி–கல்லூரி வாகனங்கள் ஆய்வு தொடங்கியது
தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி–கல்லூரி வாகனங்கள் ஆய்வு நேற்று தொடங்கியது. ஆய்வின்போது குறைகள் கண்டறியப்பட்ட வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
தர்மபுரி,
தமிழ்நாடு சிறப்பு விதிகள் 2012–ன்படி தமிழகம் முழுவதும் செயல்பாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படி பள்ளி, கல்லூரிகளில் செயல்பாட்டில் உள்ள வாகனங்கள் அனைத்து வகைகளிலும் இயக்கத்திற்கு உரிய தகுதியுடன் உள்ளனவா? என இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்து வாகனங்களுக்கு சான்று வழங்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் 140 தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இயக்கப்படும் 1123 வாகனங்களை ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்களின் தர நிலை குறித்து கண்டறியும் ஆய்வு நேற்று தொடங்கியது. பள்ளி வாகனங்ளை ஆய்வுக்கு உட்படுத்தும் முகாமை உதவி கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பள்ளி வாகனங்களில் மாணவ–மாணவிகளுக்கான வசதிகள், முதலுதவி பெட்டிகள், தீத்தடுப்பு கருவிகள் முறையாக பொருத்தப்பட்டுள்ளதா? என பார்வையிட்டார்.
விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாக வாகனத்தில் இருந்து மாணவ–மாணவிகள் வெளியேறுவதற்கான அவசர வழி கதவு முறையாக அமைக்கப்பட்டுள்ளதா? வாகனத்தில் உள்ள தீத்தடுப்பு கருவிகளை இயக்க டிரைவர்கள் கண்டக்டர்கள் பயிற்சி பெற்றுள்ளனரா? என்பது குறித்தும் அப்போது உதவி கலெக்டர் ஆய்வு செய்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், மோட்டார் வாகனஆய்வாளர்கள் மணிமாறன், ராஜாமணி,அன்புசெழியன், பன்னீர்செல்வம் ஆகியோர் பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்தனர்.சென்னை போக்குவரத்து ஆணையரின் சுற்றறிக்கைபடி பள்ளி, கல்லூரி வாகனங்களில் அனைத்து அம்சங்களும் சரியாக உள்ளதா? வாகனங்கள் இயக்கத்திற்கு உரிய முழுமையான தகுதி நிலையில் உள்ளதா? என ஆய்வின்போது சரி பார்க்கப்பட்டது. ஆய்வின்போது குறைகள் கண்டறியப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களிடம் குறைகள் சுட்டிக்காட்டப்பட்டன. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.குறைகளை சரி செய்வதற்காக அந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
பள்ளி வாகனங்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு வாகனங்களை பாதுகாப்பாக இயக்கும் முறைகள் குறித்தும்,பள்ளி செல்லும் குழந்தைகளை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றிவிடும் முறை மற்றும் வாகனத்தில் இருந்து இறக்கி விடும் முறை குறித்தும் இந்த ஆய்வின்போது அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதேபோல் வாகனங்களின் டிரைவர்கள், கண்டக்டர்களின் உரிமங்கள் நடப்பில் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது குறைகள் கண்டறியப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட வாகனங்கள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தகுதி சான்று வழங்கப்படும். ஆய்வுக்கு பின்னரும் குறைகளை சரி செய்யாத வாகனங்களை சாலைகளில் இயக்க தடைவிதிக்கப்படும். அந்த வாகனங்களுக்கான அனுமதி சீட்டை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வாகன ஆய்வு வருகிற 17–ந்தேதி, 24–ந்தேதி மற்றும் 31–ந்தேதி என மூன்று கட்டங்களில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி வாகனங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இந்த ஆய்வு நிறைவடைந்த உடன் சென்னை போக்குவரத்து ஆணையருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தெரிவித்தார்.