அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு, துப்புரவு பெண் தொழிலாளிகளே ஊசிபோடும் அவலம் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பு


அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு, துப்புரவு பெண் தொழிலாளிகளே ஊசிபோடும் அவலம் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பு
x
தினத்தந்தி 15 May 2019 3:12 AM IST (Updated: 15 May 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

துணை முதல்-மந்திரி பரமேஸ்வரின் சொந்த தொகுதியான கொரட்டகெரேவில் செயல்பட்டு வரும் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு, அங்கு துப்புரவு தொழிலாளிகளாக வேலை பார்க்கும் பெண்களே ஊசிபோடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

துமகூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வர் உள்ளார். பரமேஸ்வரின் சொந்த ஊர் துமகூரு மாவட்டம் ஆகும். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரமேஸ்வர் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே சட்டமன்ற தொகுதியில் இருந்துதான் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் பரமேஸ்வரின் சொந்த தொகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளிகளாக வேலை பார்த்து வரும் பெண்களே செவிலியர்கள் போன்று நோயாளிகளுக்கு ஊசி போடுவது, குளுக்கோஸ் ஏற்றுவது போன்ற வேலைகளை செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு:-

பரபரப்பு

கொரட்டகெரேவில் அரசு ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் 300-க்கும் மேற்பட்டோர் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு என பல பிரிவுகளும் உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் அனைவரும் உள்ளனர். மேலும் தினமும் இந்த ஆஸ்பத்திரிக்கு 1,000-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து செல்கிறார்கள்.

இப்படி இருக்க இந்த ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு அங்கு துப்புரவு தொழிலாளிகளாக வேலை பார்த்து வரும் பெண்களே ஊசி போடுவது, குளுக்கோஸ் ஏற்றுவது போன்ற வேலைகளை செய்கிறார்கள். இதுதொடர்பான வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வருத்தம் அளிக்கிறது

இதுபற்றி ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகள் சிலர் கூறுகையில், ‘‘ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள் என அனைவரும் உள்ளனர். ஆனால் அவர்கள் தங்களுடைய பணியை சரியாக செய்வதில்லை. அதுபற்றி கேட்டால் செவிலியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், அதனால்தான் துப்புரவு தொழிலாளிகளாக வேலை பார்த்து வரும் பெண்களுக்கு செவிலியருக்கான பயிற்சி கொடுக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் கூறுகிறார்கள். இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவரின் உயிரோடு விளையாடுவது தவறு. துணை முதல்-மந்திரியின் சொந்த தொகுதியிலேயே இந்த அவலம் நடப்பது வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Next Story