பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் அண்ணன்-தம்பி உள்பட 14 பேர் கைது ரூ.60.95 லட்சம் பொருட்கள் மீட்பு
பெங்களூருவில், திருட்டு வழக்குகளில் அண்ணன்-தம்பி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.60.95 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன.
பெங்களூரு,
பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கே.பி.அக்ரஹாரம் போலீசார்...
பெங்களூருவில் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கத்திரிகுப்பேயை சேர்ந்த கோபி (வயது 43), தேவரசிக்கனஹள்ளியை சேர்ந்த ராஜா என்ற ஜப்பான் ராஜா (40), மாகடி ரோட்டை சேர்ந்த டேவிட் (34) ஆகியோரை கே.பி.அக்ரஹாரம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் பகல் நேரத்தில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு இரவில் கைவரிசை காட்டினர். சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு அவர்கள் இரும்பு கம்பியை கொண்டு வீட்டு பூட்டுகளை உடைத்து திருட்டை அரங்கேற்றி உள்ளனர். கைதான 3 பேரிடம் இருந்து ரூ.35 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 119 கிராம் தங்க நகைகள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட ராஜாவை கடந்த ஆண்டு (2018) டிசம்பர் மாதம் 12-ந் தேதி கே.பி.அக்ரஹாரம் போலீசார் கைது செய்து 44 வழக்குகளுக்கு தீர்வு கண்டதோடு, ரூ.1.02 கோடி மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் சிறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி வெளியே வந்த ராஜா மீண்டும் திருட்டில் ஈடுபட்டு தற்போது போலீசில் சிக்கியுள்ளார். 2 மனைவிகள் கொண்ட ராஜா திருடும் நகைகளை அவர்கள் மூலம் விற்பனை செய்துள்ளார்.
அண்ணன்-தம்பி கைது
இதேபோல் மாகடி ரோட்டில் உள்ள மஞ்சுநாத்நகரில் அசோக் குமார் என்பவரின் கடையில் இருந்து வெள்ளிப்பொருட்கள் திருட்டு போயின. இதுகுறித்த புகாரின் பேரில் கே.பி.அக்ரஹாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையை தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டதாக அந்த கடையில் வேலை செய்து வரும் மஞ்சுநாத் நகரை சேர்ந்த ஸ்ரீதர் (38), செந்தில் குமார் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் அண்ணன்-தம்பி ஆவார்கள். இவர்களிடம் இருந்து ரூ.7.20 லட்சம் மதிப்புள்ள 17.700 கிலோ வெள்ளிப் பொருட்கள் மீட்கப்பட்டன.
பயணிகளிடம் திருட்டு
மேலும் பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ் மற்றும் பஸ் நிலையங்களில் பயணிகளிடம் தங்க நகைகளை திருடிய 2 பேர் உப்பார்பேட்டை போலீசாரிடம் சிக்கினர். விசாரணையில் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி டவுன் ஒசமனேயை சேர்ந்த பாண்ட் பாஷா (32), சையத் அக்ரம் (40) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.15.10 லட்சம் மதிப்புள்ள 503 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன. இதன்மூலம் 9 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
அதேபோல், பெங்களூருவில் திருட்டில் ஈடுபட்டு வந்த 7 பேரை உப்பார்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த விஸ்வநாத் (23), துமகூரு மாவட்டத்தை சேர்ந்த ஜபிஉல்லா (28), சிவமொக்காவை சேர்ந்த சீனிவாஸ் (34), குமார் (34), மைசூருவை சேர்ந்த ராகவேந்திரா (39), பெங்களூரு ஹெப்பகோடியை சேர்ந்த ஹரீஷ் (29), நாயண்டஹள்ளியை சேர்ந்த அஸ்லாம் பாஷா (39) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 1.82 லட்சம் ரொக்கம், ரூ.1.83 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன. மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் 34 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.60.95 லட்சம் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
முன்னதாக மீட்கப்பட்ட தங்க நகைகள், பொருட்களை கமிஷனர் சுனில் குமார் பார்வையிட்டார். மேலும் மீட்கப்பட்ட பொருட்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வேளையில் பெங்களூரு மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் பி.கே.சிங், துணை போலீஸ் கமிஷனர் ரவி.டி.சன்னனவர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story