மின்வினியோகத்தை சீராக்க வலியுறுத்தி போராடிய மக்கள்


மின்வினியோகத்தை சீராக்க வலியுறுத்தி போராடிய மக்கள்
x
தினத்தந்தி 15 May 2019 4:30 AM IST (Updated: 15 May 2019 3:30 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி பகுதியில் மின்வினியோகத்தை சீராக்க வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் வீடுகளுக்கு முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி,

காரைக்குடி ரெயில்வே பொன்நகர் பகுதிக்குட்பட்ட பில்கேட்ஸ் சிட்டி லேவுட், எல்.ஜி. லேவுட், லாவண்யா கார்டன், வள்ளல் அழகப்பா பொன்நகர், காட்டுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் சுமார் 150–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக குறைந்தழுத்த மின்சாரம் வருவதால், வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து நேற்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் இந்த பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து மின்வினியோகத்தை சீராக வழங்க வேண்டும் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:– இந்த பகுதியில் கடந்த 3ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த அழுத்த மின்சாரம் தொடர்ந்து வருவதால் எங்கள் வீடுகளில் பகல் நேரங்களில் மின்விசிறி, மின்மோட்டார், மிக்சி உள்ளிட்ட மின் சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்து வருகிறோம். இது குறித்து காரைக்குடி மின்வாரிய அலுவலக மேல் அதிகாரிகளிடம் பல முறை புகார் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் இந்த பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க நாங்கள் இடம் கொடுக்கிறோம் என்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் தரப்பில் உங்கள் பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க அனுமதி கிடைத்து விட்டது. ஆனால் அந்த டிரான்ஸ்பார்மரில் உள்ள உபகரண பொருட்கள் வரவில்லை என்று கூறுகின்றனர்.

குறைந்த அழுத்த மின்சாரத்தால் வீடுகளில் உள்ள டி.வி. பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மின்விசிறி, மின்மோட்டார், இன்வெட்டர்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வருகிறது. மேலும் அதிகாலை நேரத்தில் இந்த குறைந்தழுத்த மின்சாரத்தில் வீடுகளில் மின்மோட்டார் போட முடியாமல் தண்ணீர் இல்லாமல் அவதியடைந்து வருகிறோம். அத்தியாவசிய தேவைக்குகூட தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். இரவு 12 மணிக்கு மேல் தான் இந்த பகுதியில் சரியான முறையில் மின்சாரம் வருகிறது. அதுவும் சுமார் 1 மணி நேரம் வரை மட்டுமே கிடைக்கிறது.

தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் பகல் நேரத்தில் வீடுகளில் மின்விசிறி போட முடியாமல் குழந்தைகளுடன் பெண்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் எங்கள் பகுதி மக்கள், தங்களின் அன்றாட பணிகளை புறக்கணித்து விட்டு வீடுகளுக்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த பிரச்சினை தீராதபட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டமாக காரைக்குடி மின்வாரியத்தை முற்றுகையிட்டும், மறியல் போராட்டம் செய்ய உள்ளோம். எனவே மின்வாரிய அதிகாரிகள் எங்கள் பகுதியில் உள்ள இந்த குறைந்தழுத்த மின்சார பிரச்சினையை போக்க கூடுதலாக டிரான்ஸ்பார்மர் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story