ராஜபாளையத்தில் செயலிழந்த போக்குவரத்து சிக்னல்கள்


ராஜபாளையத்தில் செயலிழந்த போக்குவரத்து சிக்னல்கள்
x
தினத்தந்தி 15 May 2019 3:38 AM IST (Updated: 15 May 2019 3:38 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் முக்கிய சாலைகளில் செயலிழந்து காட்சி பொருளாகி விட்ட போக்குவரத்து சிக்னல் விளக்குகளை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் தற்போது வாகன போக்குவரத்து நெரிசல் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. பழைய பஸ் நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, காந்தி கலை மன்றம், ரெயில்வே பீடர் சாலை போன்ற முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல் துறை சார்பில் முக்கிய சாலைகளில் சிக்னல் விளக்குள் பொருத்தப்பட்டு, போக்குவரத்து ஓரளவு சீர்படுத்தப்பட்டது. நாளடைவில் சிக்னல்கள் செயலிழந்து தற்போது காட்சி பொருளாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக ஜவஹர் மைதானம் பஸ் நிறுத்தம், காந்தி கலை மன்றம் உள்ளிட்ட பகுதிகளில் சிக்னல்கள் செயல்பாடற்று கழன்று கீழே விழும் அபாய நிலையில் உள்ளன.

சங்கரன்கோவில் முக்கு பகுதியில் செயல்படாமல் இருந்த போக்குவரத்து சிக்னல் காற்றினால் கீழே விழுந்து அதை சாலை ஓரத்தில் பல மாதங்களாக பொதுமக்களுக்கு இடையூறாக போட்டு விட்டு சென்றுவிட்டனர்.

பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட சிக்னல் விளக்குகள் தற்போது செயல்படாமல் இருப்பதால் பொதுமக்களின் உயிர் மீது அக்கறை கொள்ளாமல் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன.

எனவே செயல்படாமல் இருக்கும் சிக்னல் விளக்குகளை செயல்பட செய்து வாகனங்களை ஒழுங்குபடுத்த போலீஸ் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story