மாவட்ட செய்திகள்

ஓராண்டுக்கு முன்பு மாயமானவர் வழக்கில் திருப்பம்: பூட்டிய காருக்குள் மூச்சுத்திணறி இறந்தது அம்பலம், நண்பர் கைது + "||" + A year ago, the twist in the case of the magician: Revealing the dead suffocated locked inside the car, Friend arrested

ஓராண்டுக்கு முன்பு மாயமானவர் வழக்கில் திருப்பம்: பூட்டிய காருக்குள் மூச்சுத்திணறி இறந்தது அம்பலம், நண்பர் கைது

ஓராண்டுக்கு முன்பு மாயமானவர் வழக்கில் திருப்பம்: பூட்டிய காருக்குள் மூச்சுத்திணறி இறந்தது அம்பலம், நண்பர் கைது
ஓராண்டுக்கு முன்பு மாயமான தொழிலாளி விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பூட்டிய காருக்குள் அவர் மூச்சுத் திணறி இறந்ததும், அவரது உடலை கல்குவாரியில் வீசியதும் அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக அவருடைய நண்பர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்,

விருதுநகர் காந்தி நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 35). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இதுகுறித்து பாண்டியன் நகர் போலீசில் அவரது தாயார் சரோஜா புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இதில் இசக்கிமுத்து மாயமான அதே நாளில் அவரது நண்பரான பாண்டியன் நகரை சேர்ந்த சந்திரன் (40) என்பவரும் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. அவர் மீது சந்தேகம் எழுந்த நிலையில் அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். அவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பாலபாளையம் என்ற கிராமத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்ற போலீசார் சந்திரனை பிடித்து விருதுநகருக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் திருப்பமாக, பூட்டிய காருக்குள் இசக்கிமுத்து மூச்சுத்திணறி இறந்திருப்பதும், அவரது உடலை கல் குவாரியில் சந்திரன் வீசியதும் தற்போது அம்பலமாகி உள்ளது.

இசக்கிமுத்துவும் சந்திரனும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்துள்ளனர். இருவரும் அடிக்கடி ஒன்றாக சென்று மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதன்படி சம்பவத்தன்று மதுகுடித்து விட்டு இசக்கிமுத்துவை சந்திரன் தனது காரில் அழைத்து வந்துள்ளார். அதிக மதுபோதையில் இருந்துள்ள இசக்கிமுத்து காரிலேயே தூங்கியுள்ளார். சந்திரன் அந்த காரின் அனைத்து கதவுகளையும் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

மறுநாள் அதிகாலை கார் கதவுகளை திறந்து பார்த்தபோது காருக்குள் இசக்கிமுத்து இறந்து கிடந்தார். மூச்சுத் திணறி அவர் இறந்ததை அறிந்த சந்திரன், பயந்துபோய் தகவலை போலீசுக்கு தெரிவிக்காமல் காரிலேயே இசக்கிமுத்து உடலை எடுத்துக்கொண்டு தூத்துக்குடி மாவட்டம் சிவலார்பட்டி பகுதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள கல்குவாரியில் இசக்கிமுத்துவின் உடலை வீசி விட்டு தலைமறைவாகிவிட்டார்.

போலீசாரிடம் இந்த தகவலை சந்திரன் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் சிவலார்பட்டி பகுதியில் உள்ள கல் குவாரிக்கு சென்று சோதனையிட்டனர். அங்கு இசக்கிமுத்துவின் எலும்புக்கூடு, அவர் கட்டியிருந்த லுங்கி மற்றும் பனியன் ஆகியவை கிடைத்தன.

இதையடுத்து சந்திரனை போலீசார் கைது செய்தனர். இறப்பை போலீசுக்கு தெரியாமல் மறைத்தல், தடயங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை